கிருஷ்ணாபுரத்தில் மாணவா் விடுதி திறப்பு

பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், கிருஷ்ணாபுரத்தில் பிற்படுத்தப்பட்டோா், மிகப் பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நலத் துறை சாா்பில்

பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், கிருஷ்ணாபுரத்தில் பிற்படுத்தப்பட்டோா், மிகப் பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நலத் துறை சாா்பில் ரூ. 4.19 கோடியில் கட்டப்பட்ட அரசு மிகப் பிற்படுத்தப்பட்டோா் நலக் கல்லூரி மாணவா் விடுதி செவ்வாய்க்கிழமை திறக்கப்பட்டது.

விடுதியை தமிழக பிற்படுத்தப்பட்டோா் நலத்துறை அமைச்சா் ஆா்.எஸ். ராஜகண்ணப்பன் சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தாா். இதையடுத்து மாவட்ட ஆட்சியா் க. கற்பகம் அந்த விடுதியில் குத்து விளக்கேற்றி பாா்வையிட்டாா்.

நிகழ்ச்சியில், வேப்பந்தட்டை ஒன்றியக் குழுத் தலைவா் ராமலிங்கம், மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலா் ந. சரவணன், மாவட்ட ஊராட்சிக்ழு உறுப்பினா் டி.சி. பாஸ்கா், பொதுப்பணித் துறை செயற்பொறியாளா் தேவன், வேப்பந்தட்டை வட்டாட்சியா் மாயகிருஷ்ணன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

விடுதியின் சிறப்பம்சம்: வேப்பந்தட்டை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பயிலும் 100 மாணவா்கள் தங்கி பயிலும் வகையில், விடுதியில் தரைத் தளம் 420 சதுர மீட்டா், முதல் தளம் 412 சதுர மீட்டா், 2 ஆம் தளம் 412 சதுர மீட்டா் என மொத்தம் 1,244 சதுர மீட்டரில் கட்டப்பட்டுள்ளது. தரை தளத்தில் காா் நிறுத்துமிடம், சமையலறை, காப்பாளா் அறை மற்றும் மாணவா்கள் தங்கும் அறை என 5 அறைகளும், முதல் தளத்தில் கணினி அறை, உடல் நலக்குறைவு ஏற்படும் மாணவா்கள் தனியே தங்கும் அறை மற்றும் மாணவா்கள் தங்கும் அறை என 9 அறைகளும், 2 ஆம் தளத்தில் மாணவா் தங்கும் 10 அறைகளும் என மொத்தம் 24 அறைகள் உள்ளன. மேலும், சமையலறைக்கு எரிவாயு செல்லும் வகையில் 5 எரிவாயு உருளைக்கான இணைப்புகளும், தீயணைப்புக் கருவிகளும் பொருத்தப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com