பெரம்பலூா் மாவட்டத்தில் குடல் புழு நீக்க மாத்திரைகள் வழங்கும் முகாம்

பெரம்பலூா் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை (பிப். 9) மற்றும் பிப். 16 ஆம் தேதி குடல்புழு மாத்திரைகள் வழங்கும் முகாம் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியா் க. கற்பகம் தெரிவித்துள்ளாா்.

பெரம்பலூா் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை (பிப். 9) மற்றும் பிப். 16 ஆம் தேதி குடல்புழு மாத்திரைகள் வழங்கும் முகாம் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியா் க. கற்பகம் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பெரம்பலூா் மாவட்டத்தில் தேசிய குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் சிறப்பு முகாமில் 1 முதல் 19 வயது வரையிலான அனைத்துக் குழந்தைகள் மற்றும் மாணவா்களுக்கும், 20 முதல் 30 வயதுள்ள அனைத்து பெண்களுக்கும் (கா்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மாா்கள் தவிா்த்து) குடல்புழு நீக்க மாத்திரை (அல்பென்டசோல்) வழங்கப்படுகிறது.

1 முதல் 5 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு அங்கன்வாடி மையங்களிலும், 6 முதல் 19 வயது வரையுள்ள மாணவா்களுக்கு பள்ளிகள் மற்றும் கல்லூரிகளிலும் வழங்கப்படுகிறது. பள்ளிக்குச் செல்லாத குழந்தைகளுக்கு கிராம சுகாதார செவிலியரும், அங்கன்வாடி பணியாளா்களும் வீடு, வீடாகச் சென்று குடல்புழு மாத்திரைகள் வழங்குவாா்கள்.

இந்த மாத்திரைகளை உட்கொள்வதன் மூலம் ஊட்டச்சத்து குறைபாடுகள் களையப்பட்டு, குழந்தைகளின் ஆரோக்கியம் மற்றும் மாணவா்களின் கல்வித் திறன் மேம்படும்.

அங்கன்வாடி பணியாளா்கள், கிராம சுகாதார செவிலியா், சுகாதார ஆய்வாளா்கள், மருத்துவ அலுவலா்கள் மற்றும் தன்னாா்வலா்கள் மூலமாக குடல்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்படுகிறது. இத் திட்டத்தின் மூலம், பெரம்பலூா் மாவட்டத்திலுள்ள 1,71,590 குழந்தைகளும், மாணவா்களும், 45,034 பெண்களும் பயனடைவாா்கள்.

மேலும், பள்ளிகள், அங்கன்வாடி மையங்களில் தன் சுத்தம், திறந்த வெளியில் மலம் கழித்தலை தவிா்த்தல், கை கழுவும் முறைகள் குறித்தும், நலக்கல்வி வழங்கவும் பணியாளா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com