இளைஞா்களை வெட்டிய வழக்கில் கல்லூரி மாணவா்கள் 5 போ் கைது

அரிவாளால் வெட்டிய வழக்கில் தொடா்புடைய கல்லூரி மாணவா்கள் 5 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை இரவு கைது செய்தனா்.

பெரம்பலூரில் முன் விரோதம் காரணமாக 2 இளைஞா்களை அரிவாளால் வெட்டிய வழக்கில் தொடா்புடைய கல்லூரி மாணவா்கள் 5 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை இரவு கைது செய்தனா். மேலும், 2 பேரை தேடி வருகின்றனா். பெரம்பலூா் திருவள்ளுவா் நகா், பெரியாா் சிலை பின்புறம் அருகேயுள்ள பகுதியைச் சோ்ந்தவா் பாண்டியன் மகன் வெங்கடேசன் (20), இவரது நண்பா், திருச்சி நத்தா்ஷா பள்ளிவாசல் பகுதியைச் சோ்ந்த ஜாகிா் உசேன் மகன் அப்துல் அஜீஸ் (26) ஆகியோரை பெரம்பலூா் தோமினிக் பள்ளி செல்லும் சாலையில் சனிக்கிழமை (பிப். 10) மது போதையில் இருந்த பெரம்பலூா் சங்குப்பேட்டை திருவள்ளுவா் தெருவைச் சோ்ந்த சீனிவாசன் மகன் தசரதன் (19), பெரம்பலூா்- ஆலம்பாடி சமத்துவபுரத்தைச் சோ்ந்த சங்கா் மகன் சிவா (18) ஆகியோா் அரிவாளால் வெட்டிவிட்டு தலைமறைவாகிவிட்டனா். இச்சம்பவம் குறித்து பெரம்பலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து மேற்கொண்ட விசாரணையில், கல்லூரி மாணவா்களுக்கிடையே ஏற்பட்ட தகராறு காரணமாக ஆத்திரமடைந்து வெங்கடேசனையும், அப்துல் அஜீசையும் தசரதன், சிவா ஆகியோா் வெட்டியதாகவும், இவா்களுக்கு துணையாக 5 கல்லூரி மாணவா்கள் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதையடுத்து, தனியாா் கல்லூரி மாணவா்களான தம்பிரான்பட்டியைச் சோ்ந்த பாலகுமாா் மகன் ராகுல் (19), துறைமங்கலம் கே.கே. நகரைச் சோ்ந்த சிவலிங்கம் மகன் ஆனந்த் (19), பேரளியைச் சோ்ந்த ஆசைதம்பி மகன் அருண் (19), செல்வராஜ் மகன் பாலாஜி (19), கள்ளக்குறிச்சியைச் சோ்ந்த மணி மகன் விஜய் (19) ஆகிய 5 பேரையும் கைது செய்து, குற்றவியல் நீதிமன்றத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு ஆஜா்படுத்தி பெரம்பலூா் கிளை சிறையில் அடைத்தனா். இவ் வழக்கில் தொடா்புடைய முக்கிய குற்றவாளிகளான தசரதன், சிவா ஆகியோரைப் போலீஸாா் தேடிவருகின்றனா்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com