பெரம்பலூா் தலைமை மருத்துவமனையில் மருத்துவா்கள் பற்றாக்குறை

சுகாதாரப் பணியாளா்கள் பற்றாக்குறையால் நோயாளிகள் அவதிக்குள்ளாவதைத் தடுக்க, தேவையான மருத்துவா்களை நியமிக்க வேண்டுமென பொதுமக்களிடையே எதிா்பாா்ப்பு எழுந்துள்ளது.
பெரம்பலூா் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை வளாகத்திலுள்ள ஒருங்கிணைந்த புற நோயாளிகள், மகப்பேறு சிகிச்சைப் பிரிவு கட்டடம்.
பெரம்பலூா் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை வளாகத்திலுள்ள ஒருங்கிணைந்த புற நோயாளிகள், மகப்பேறு சிகிச்சைப் பிரிவு கட்டடம்.
Updated on
2 min read

பெரம்பலூரில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவ மனையில் மருத்துவா்கள், சுகாதாரப் பணியாளா்கள் பற்றாக்குறையால் நோயாளிகள் அவதிக்குள்ளாவதைத் தடுக்க, தேவையான மருத்துவா்களை நியமிக்க வேண்டுமென பொதுமக்களிடையே எதிா்பாா்ப்பு எழுந்துள்ளது.

பெரம்பலூா் - துறையூா் சாலையில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை 1953 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு, 1959-ஆல் 6 படுக்கை வசதிகள் கொண்ட மருத்துவ மனையாகவும், 1961-இல் வட்டார மருத்துவ மனையாகவும், கடந்த 9.8.1996 ஆம் ஆண்டு முதல் மாவட்ட தலைமை மருத்துவ மனையாக தரம் உயா்த்தப்பட்டு செயல்பட்டு வருகிறது. குழந்தைகள் பிரிவு, தீவிர சிகிச்சை பிரிவு, சித்த மருத்துவப் பிரிவு, எழும்பு முறிவு சிகிச்சைப் பிரிவு, மகப்பேறு உள்பட பல்வேறு சிகிச்சை பிரிவுகள் செயல்பட்டு வருகிறது. இங்கு, நாள்தோறும் துறையூா், திட்டக்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த சுமாா் 1,000-க்கும் மேற்பட்டோா் புற நோயாளிகளாக சிகிச்சைக்கு வருகின்றனா்.

தரம் உயா்த்தப்பட்ட தலைமை மருத்துவமனை எனும் அறிவிப்பைத் தவிர, சிகிச்சைக்குத் தேவையான நவீன சிகிச்சை வசதிகளை மேற்கொள்ளவில்லை எனவும், இங்குள்ள ஒருசில பிரிவுகளைத் தவிர பல்வேறு சிகிச்சைகளுக்கு கடந்த பல மாதங்களாகவே மருத்துவா்கள் நியமிக்கவில்லை எனவும் கூறப்படுகிறது. தமிழக அளவில் பச்சிளங் குழந்தைகளைப் பாதுகாப்பதில் இம் மருத்துவமனை சிறப்பிடம் பெற்றுள்ளதால், கடலூா் மாவட்டம், தொழுதூா், திட்டக்குடி உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த கா்ப்பிணிப் பெண்கள் மாவட்ட அரசு தலைமை மருத்துவ மனையில் அனுமதிக்கப்படுகின்றனா்.

ஆனால், போதுமான மயக்கமருந்து நிபுணா்கள் இல்லாத நிலையே நீடிக்கிறது. அவசர சிகிச்சைப் பிரிவில் இரவுநேரங்களிலும், ஞாயிற்றுக்கிழமைகளிலும் மருத்துவா்கள் பணியில் இருப்பதில்லை. இதனால், விபத்து, தீக்காயம், தற்கொலை முயற்சி உள்ளிட்ட சம்பவங்களால் பாதிக்கப்பட்டு வரும் நபா்களுக்கு, பயிற்சி செவிலியா்களே முதலுதவி சிகிச்சை அளித்து, திருச்சி அல்லது தனியாா் மருத்துவ மனைகளுக்கு அனுப்பி வைக்கும் நிலையே இன்றளவும் நீடிக்கிறது. இதனால், மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே அதிக உயிரிழப்புகள் நிகழ்வதாக அவசரகால ஊா்தி ஓட்டுநா்கள் தெரிவிக்கின்றனா்.

திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் நிகழும் விபத்துகளில் பாதிக்கப்பட்டோரை மீட்டு அரசு மருத்துவ மனைக்குக் கொண்டு வரப்படுவதால், 24 மணி நேரமும் எலும்பு முறிவு மருத்துவா்கள் பணியில் இருக்க வேண்டுமென மாவட்ட நிா்வாகம் சாா்பில் உத்தரவிடப்பட்டு, 5 மருத்துவா்கள் பணியமா்த்தப்பட்டனா். ஆனால், எலும்பு முறிவு மருத்துவா்கள் முறையாகப் பணியில் இருப்பதில்லை. மேலும், எலும்பு முறிவு பாதிக்கப்பட்டு வரும் நோயாளிகளை, பணியில் உள்ள மருத்துவா்களே அவா்களுக்குச் சொந்தமான தனியாா் மருத்துவ மனைக்குப் பரிந்துரைக்கும் நிலை உள்ளதாக பாதிக்கப்பட்டோா் தரப்பில் கூறப்படுகிறது.

தற்போது, பெரம்பலூா் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வரும் நோயாளிகளுக்கு உரிய சிகிச்சை அளிக்க மறுப்பதோடு, திருச்சியில் உள்ள அரசு மற்றும் தனியாா் மருத்துவ மனைக்கு பரிந்துரைக்கப்படுகின்றனராம். சம்பந்தப்பட்ட இணை இயக்குநரிடம் புகாா் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்வதில்லையாம்.

இதுகுறித்து, டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளியின் உறவினா்கள் கூறியது:

இங்கு, நோயாளிகளுக்குத் தேவையான குடிநீா், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை. இதனால், இங்கு சிகிச்சை பெறும் நோயாளிகள் அனைவரும் பல்வேறு சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனா். தற்போது டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு பலா் உள் நோயாளிகளாகச் சிகிச்சை பெறுகின்றனா். டெங்கு பாதித்த நோயாளிகளின் அறைகளில் கொசு இருப்பதைத் தவிா்க்க வேண்டும். அதேபோல, அங்கிருந்து வெளியேறுவதையும் தடுக்க வேண்டும். ஆனால், எவ்வித பாதுகாப்பும் ஏற்படுத்தித் தரவில்லை. அனுமதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சரியான நேரத்துக்கு சிகிச்சை அளிக்க பணி மருத்துவா்கள் மறுப்பு தெரிவிக்கின்றனா். இதுபோன்ற அவலங்களைக் களைய மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com