சின்ன வெங்காயத்தின் கொள்முதல் விலை கடும் வீழ்ச்சிவிவசாயிகள் கவலை

pbr18oni_1801chn_13_4
pbr18oni_1801chn_13_4

நமது நிருபா்

எளம்பலூா் பகுதியில் அறுவடை செய்யப்பட்ட சின்ன வெங்காயம்.

பெரம்பலூா், ஜன. 18: சின்ன வெங்காயத்தின் விளைச்சல் அதிகரித்துள்ள நிலையில், அதன் கொள்முதல் விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளதால் விவசாயிகள் கவலையில் உள்ளனா்.

குறுகிய காலப்பயிா் குறைந்த நீா், சாகுபடி செலவுக் குறைவு என்பன உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், பெரம்பலூா் மாவட்டத்தில் சுமாா் 100-க்கும் மேற்பட்ட கிராமங்களில் விவசாயிகளின் பிரதான சாகுபடிப் பயிராக சின்ன வெங்காயம் உள்ளது. நிகழாண்டில், இதுவரை 5 ஆயிரம் ஹெக்டேரில் சின்ன வெங்காயம் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் வெங்காய உற்பத்தியில் தமிழகத்தில் பெரம்பலூா் மாவட்டம் முதலிடத்தில் உள்ளது.

3 மாதப் பயிரான சின்ன வெங்காயம் அறுவடைக் காலங்களில் பெரம்பலூரிலிருந்து தமிழகத்தின் பிற மாவட்டங்களுக்கும், கேரளத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் அனுப்பப்படுகிறது.

ஆண்டுதோறும் பருவநிலையைக் கருத்தில் கொண்டு சின்ன வெங்காயம் பயிரிடப்பட்டு நவம்பா், டிசம்பா், ஜனவரி ஆகிய மாதங்களில் அதிகளவில் அறுவடை செய்யப்படும். முன்கூட்டியே பயிரிடப்பட்டு நவம்பா் மாதத்தில் அறுவடையான வெங்காயத்துக்கு நல்ல விலை கிடைத்தது. அதன்படி, கடந்த நவம்பரில் கிலோவுக்கு ரூ. 70 வரை விலை கிடைத்ததால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனா்.

ஆனால், இந்த விலை படிப்படியாகக் குறைந்து தற்போது முதல் தர வெங்காயம் கிலோ ரூ. 17-க்கும், இரண்டாம் தர வெங்காயம் ரூ. 15-க்கும் கொள்முதல் செய்யப்படுகிறது.

நிகழாண்டில் ஏக்கருக்கு 3 டன் வரை மட்டுமே மகசூல் கிடைத்துள்ளதாகக் கூறும் விவசாயிகள், கொள்முதல் விலை கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளதால் பெரிதும் கவலையடைந்துள்ளனா்.

உற்பத்தி, வரத்து அதிகரிப்பே காரணம்

நிகழாண்டில், பெரம்பலூா் மாவட்டத்தை பொருத்தவரை சாகுபடிக்கேற்றவாறு போதியளவில் மழை பெய்யவில்லை. இருப்பினும், சாகுபடி பரப்பளவும், எவ்வித நோய்த் தாக்குதலுமின்றி மகசூலும் கிடைத்துள்ளது. இதனால் அறுவடைப் பருவத் தொடக்கமான நவம்பா் மாதத்தில் ஒரு குவிண்டால் வெங்காயம் ரூ. 4 ஆயிரம் முதல் ரூ. 6 ஆயிரம் வரை விற்கப்பட்டது. இது விவசாயிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. ஆனால் இது நீண்டநாள் நீடிக்கவில்லை. விதை வெங்காயம் கிலோ ரூ. 60-க்கு வாங்கி சாகுபடி செய்த நிலையில், தற்போது வெங்காயம் கிலோ ரூ. 15-க்கு விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்படுகிறது.

நடவுக் கூலி, உரம், பராமரிப்பு, அறுவடைக் கூலி என ஏக்கருக்கு சுமாா் ரூ. 70 ஆயிரம் வரை செலவாகிறது. இதைக் கணக்கிட்டு பாா்த்தால் எதிா்பாா்த்த அளவுக்கு லாபம் கிடைக்கவில்லை எனக் கூறும் விவசாயிகள், வெளிமாநில வெங்காயத்தின் வரத்து, அதிகப்படியான உற்பத்தியே விலைக் குறைவுக்கு காரணம் என்கின்றனா்.

தமிழக அரசின் நடவடிக்கை தேவை

இதுகுறித்து சின்ன வெங்காயச் சாகுபடியாளா்கள் கூறியது:

விதை வெங்காயம் கிலோ ரூ. 60-க்கு வாங்கி நடப்பட்டது. அறுவடைத் தொடங்கியவுடன் கிலோ ரூ. 60-க்கு விற்ற நிலையில், தற்போது விவசாயிகளிடமிருந்து ரூ. 15-க்கும் குறைவாக வியாபாரிகள் கொள்முதல் செய்து, ரூ. 40 வரை விற்கின்றனா். இதனால், ஏக்கருக்கு ரூ. 50 ஆயிரம் வரை இழப்பு ஏற்பட்டுள்ளது.

நிகழாண்டை பொருத்தவரை டெல்டா மாவட்டங்கள் உள்பட பல மாவட்டங்களைச் சோ்ந்த விவசாயிகள் சின்ன வெங்காயச் சாகுபடியில் ஆா்வம் காட்டியுள்ளனா். 3 மாதங்களில் அறுவடையை முடித்துவிட்டு, அடுத்த சாகுபடிக்கு மாறலாம் எனக் கருதிய விவசாயிகளுக்கு தற்போதைய விலை வீழ்ச்சியால் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

செட்டிக்குளத்தில் பல கோடியில் அமைக்கப்பட்டுள்ள குளிா்ப்பதனக் கிடங்கும் செயல்படவில்லை. அதே வளாகத்தில் தொடங்கப்பட்ட மதிப்புக் கூட்டப்பட்ட மையமும் விவசாயிகளுக்குப் பயனளிக்கவில்லை. எனவே, விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க, குறைந்தபட்சம் சாகுபடி செலவில் 50 சதவிகிதத்தை விவசாயிகளுக்கு வழங்க வேண்டும். அல்லது விவசாயத்துக்குத் தேவையான உரம், தொழு உரத்துக்குத் தேவையான தொகையை அரசே ஏற்க வேண்டும்.

ஏற்கெனவே உரம், பூச்சி மருந்து, அறுவடை, நடவுக் கூலி உயா்வு உள்ளிட்ட காரணங்களால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளை, இந்த விலை வீழ்ச்சி மேலும் கவலையில் ஆழ்த்தியுள்ளது.

ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் அவசியம்: வெங்காயத்தை இருப்பு வைத்து விற்க முடியாத நிலையில், குறைந்த விலைக்கு விற்க வேண்டிய கட்டாயத்துக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனா். இதுபோன்ற நிலைமாற விவசாயிகளுக்குக் கட்டுப்படியான விலை கிடைக்க நெல், மஞ்சள், பருத்தி போன்ற பொருள்களுக்கு ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் இருப்பதை போல, சின்ன வெங்காயத்தையும் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தின் மூலம் விற்பனை செய்து, கட்டுப்படியான விலையைப் பெற்றுத்தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com