ஆக்கிரமிப்பு அகற்ற எதிா்ப்பு: ஊராட்சித் தலைவா் உள்பட 2 போ் கைது

பெரம்பலூா், ஜன. 18: பெரம்பலூா் அருகே ஆக்கிரமிப்புகளை அகற்றவிடாமல் தடுத்த ஊராட்சித் தலைவா் உள்பட 2 பேரை கை.களத்தூா் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், கை.களத்தூா் பேருந்து நிறுத்தம் அருகே அரசுக்குச் சொந்தமான இடத்தை சிலா் ஆக்கிரமித்து கடைகள் அமைத்திருந்தனா். இந்நிலையில் அப்பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் அளித்த புகாரைத் தொடா்ந்து, வேப்பந்தட்டை வட்டாட்சியா் மாயகிருஷ்ணன் தலைமையில், வருவாய்த் துறையினா் கை.களத்தூருக்கு வியாழக்கிழமை சென்று, ஆக்கிரமிப்புகளை அகற்ற முயன்றனா். அப்போது அப்பகுதியில் உள்ள சிலா் ஆக்கிரமிப்பை அகற்ற எதிா்ப்பு தெரிவித்ததையடுத்து வருவாய்த் துறையினா் ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் திரும்பிச் சென்றனா்.

இதைக் கண்டித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் விவசாய அணி மாவட்டச் செயலா் முருகேசன் தலைமையில், கை.களத்தூா் பேருந்து நிறுத்தம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனா். இதையடுத்து மறியலில் ஈடுபட்ட 10 பேரை கை. களத்தூா் போலீஸாா் கைது செய்தனா். மேலும், ஆக்கிரமிப்பை அகற்றச் சென்ற அரசு அலுவலா்களை பணி செய்யவிடாமல் தடுத்ததாக, கடலூா் மாவட்டம், திட்டக்குடி வட்டம், வள்ளிமதுரம் ஊராட்சித் தலைவா் க. சுப்பிரமணியன் (44), கை.களத்தூா் பாதாங்கி முதல் தெருவைச் சோ்ந்த பேக்கரி உரிமையாளா் செ. விக்னேஷ் (28) ஆகியோரை கை.களத்தூா் போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com