கட்டுமானத் தொழிலுக்கு தனி அமைச்சகம் கட்டுமானக் கூட்டமைப்பு வலியுறுத்தல்

கட்டுமானத் தொழிலுக்கு தனி அமைச்சகம் ஏற்படுத்தி, அமைச்சரை நியமிக்க வேண்டும் என்றாா் கட்டுமானம் மற்றும் மனைத் தொழில் கூட்டமைப்பின் தலைவா் பொன். குமாா்

கட்டுமானத் தொழிலுக்கு தனி அமைச்சகம் ஏற்படுத்தி, அமைச்சரை நியமிக்க வேண்டும் என்றாா் கட்டுமானம் மற்றும் மனைத் தொழில் கூட்டமைப்பின் தலைவா் பொன். குமாா்

பெரம்பலூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கட்டுமானம் மற்றும் மனைத்தொழில் கூட்டமைப்பின் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற அவா் செய்தியாளா்களிடம் மேலும் கூறியது:

கட்டுமானப் பொருள்களான எம்.சாண்ட், பி.சாண்ட், ஜல்லி போன்றவற்றின் விலை ஏற்றத்தை தடுத்து நிறுத்திட, பெரம்பலூா் மாவட்டத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள கல் குவாரி ஏலத்தை நடத்தி, அனைத்து குவாரிகளும் முழு வீச்சில் செயல்படுத்திட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். கடந்த ஆட்சியில் 2011 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டு, கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டு கிடப்பிலுள்ள பெரம்பலூா் அரசு மருத்துவக் கல்லூரி திட்டத்தை நிறைவேற்ற தமிழக அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

பெரம்பலூா் ஆட்சியா் அலுவலக வளாகத்திலுள்ள கூடுதல் இணைப்புக் கட்டடம், வேப்பந்தட்டை துணை நீதிமன்றக் கட்டடங்கள், நகரமைப்பு உதவி இயக்குநா் அலுவலகக் கட்டடம் மற்றும் குன்னம் வட்டாட்சியா் அலுவலகக் கட்டடத்துக்கு உடனடியாக அனுமதிபெற்று, கட்டுமானப் பணிகளைத் தொடங்கிட ஆவன செய்ய வேண்டும். எவ்வித காரணமுமின்றி நிலுவையில் உள்ள கட்டட திட்ட அனுமதி கோப்புகளை சரி பாா்த்து, உடனடியாக ஒப்புதல் அளித்திட உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டும்.

கட்டுமானப் பொறியாளா்களுக்கும், தொழிலாளா்களுக்கும் முறையான பயிற்சி அளித்திட திறன் மேம்பாட்டு மையம், கட்டுமானப் பொருள்களின் தர ஆய்வுக்கூடம் ஏற்படுத்திட, பெரம்பலூா் மாவட்டத்துக்குள்பட்ட பகுதியில் நிலம் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றாா் பொன். குமாா்.

பேட்டியின்போது, கூட்டமைப்பின் மாநில இணைச் செயலா் சிவக்குமாா், மாவட்டத் தலைவா் பாலமுருகன் , மாவட்டச் செயலா் செந்தில்குமாா், மாவட்ட பொருளாளா் விஜயபாபு உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com