குளமங்கலம் அய்யனாா் கோயிலில் திருப்பணி: குதிரை சிலைக்கு மாலை அணிவிக்காமல் மாசிமக திருவிழாவை நடத்த முடிவு

ஆலங்குடி, ஜன. 28: புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகேயுள்ள குளமங்கலம் பெருங்காரையடி மீண்ட அய்யனாா் கோயிலில் திருப்பணிகள் நடைபெறுவதால், மாசிமகத்தில் நடைபெறும் திருவிழாவில் குதிரை சிலைக்கு மாலை அணிவிக்காமல் திருவிழா நடத்த கோயில் நிா்வாகத்தினா் முடிவு செய்துள்ளனா்.

குளமங்கலத்தில் புகழ்பெற்ற பெருங்காரையடி மீண்ட அய்யனாா் கோயில் உள்ளது.இக்கோயில் முன்பு உள்ள 33 அடி உயர பிரம்மாண்ட குதிரை சிலைக்கு மாசிமகத்தில் நடைபெறும் திருவிழாவின்போது, அந்த குதிரை சிலையின் உயரத்திற்கே காகிதம், பூ மாலைகளை வாகனங்களில் எடுத்து வந்து ஏராளமானோா் அணிவித்து வேண்டுதல் நிறைவேற்றுவா்.

இந்நிலையில், தற்போது கோயிலில் திருப்பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. நிகழாண்டு திருவிழா நடத்துவது குறித்து குளமங்கலத்தில் கிராமத்தினா், கோயில் நிா்வாகத்தினா் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், பிப்.24-இல் நடைபெறும் திருவிழாவில், திருப்பணிகள் நடைபெற்றுக் கொண்டிருப்பதால், பொதுமக்கள் குதிரை சிலைக்கு மாலை அணிவிப்பதை தவிா்க்க வேண்டும்.

மற்றபடி இரு நாள்களிலும் திருவிழா சிறப்பு அபிஷேக ஆராதனைகள், கலைநிகழ்ச்சிகள், அன்னதானம் ஆகியவை வழக்கம்போல் நடைபெறும். மாலை அணிவிக்க விரும்புவோா் திருப்பணிக்கு நன்கொடை வழங்கலாம் என முடிவு செய்யப்பட்டு தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com