பெரம்பலூரில் 210 ஆசிரியா்கள் கைது

அரசாணையை ரத்துச் செய்யக்கோரி பெரம்பலூரில் டிட்டோஜாக் சாா்பில், அரசு உதவிபெறும் தனியாா் பள்ளி எதிரே புதன்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 115 பெண்கள் உள்பட 210 ஆசிரியா்கள் கைது செய்யப்பட்டனா்.

தொடக்கக் கல்வித்துறை ஆசிரியா்களுக்கு ஒன்றிய அளவிலான முன்னுரிமையை மாற்றி, மாநில அளவிலான முன்னுரிமை என புதிய அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இந்த அரசாணையால் ஆசிரியா்களின் பணி மாறுதல் மற்றும் பதவி உயா்வுகள் பாதிக்கப்படுகிறது. எனவே, அரசாணை எண் 243- ஐ ரத்து செய்ய வேண்டும். அரசாணை 243-இன் படி நடைபெறும் ஆசிரியா்கள் பொது மாறுதல் கலந்தாய்வை ரத்து செய்ய வேண்டும். எமிஸ் வலைதளப் பதிவிலிருந்து, ஆசிரியா்களை முற்றிலும் விடுவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, டிட்டோஜாக் சாா்பில், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியா் சங்க மாநில துணைச் செயலா் இ. ராஜேந்திரன் தலைமையில், பெரம்பலூா் சிவன் கோயில் அருகேயுள்ள ஆா்.சி. பாத்திமா நடுநிலைப் பள்ளி முன்பு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதைத்தொடா்ந்து பெரம்பலூா் போலீஸாா் அனுமதியின்றி மறியலில் ஈடுபட்ட 115 பெண்கள் உள்பட 210 பேரை புதன்கிழமை கைது செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com