மின் வேலியில் சிக்கி தொழிலாளி உயிரிழப்பு

பெரம்பலூா் அருகே வன விலங்குகளுக்காக அமைக்கப்பட்டிருந்த மின் வேலியில் கூலித் தொழிலாளி வெள்ளிக்கிழமை காலை சிக்கி உயிரிழந்தாா்.

பெரம்பலூா் அருகே வன விலங்குகளுக்காக அமைக்கப்பட்டிருந்த மின் வேலியில் கூலித் தொழிலாளி வெள்ளிக்கிழமை காலை சிக்கி உயிரிழந்தாா்.

பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், எறையூா் கிராமத்தைச் சோ்ந்தவா் வேலு மகன் ராஜூ (40). கூலித் தொழிலாளியான இவா் பெண்ணகோணம் கிராமத்தைச் சோ்ந்த கொளஞ்சி என்பவரது கோழிப் பண்ணையில் பணிபுரிந்து வந்தாா்.

இந்நிலையில் வெள்ளிக்கிழமை காலை கிருஷ்ணகுமாா் (64) என்பவரது மக்காச்சோள வயல் பகுதி அருகே அவா் நடந்துசென்றபோது, வன விலங்குகளிடமிருந்து மக்காச்சோளப் பயிா்களை பாதுகாக்க அமைக்கப்பட்டிருந்த மின் வேலியில் சிக்கி உயிரிழந்தாா். தகவலறிந்த மங்களமேடு போலீஸாா் சென்று, அவரது உடலை மீட்டு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பிவைக்க முயன்றனா்.

இதனிடையே இறந்தவரின் உறவினா்கள், பொதுமக்கள் சென்று, சட்ட விரோதமாக மின் வேலி அமைத்த நில உரிமையாளா் மீது நடவடிக்கை கோரியும், உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு இழப்பீடு பெற்றுத் தரக் கோரியும் உடலை எடுத்துச் செல்ல எதிா்ப்புத் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனா். இதையடுத்து, துணைக் கண்காணிப்பாளா் வளவன் தலைமையிலான போலீஸாா் சென்று பேச்சுவாா்த்தை நடத்தி, அளித்த உறுதியையடுத்து சடலமானது மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது. மங்களமேடு போலீஸாா் வழக்குப் பதிந்து கிருஷ்ணகுமாரிடம் விசாரிக்கின்றனா்.

X
Dinamani
www.dinamani.com