ஊரக வளா்ச்சித் துறை 
தொழிலாளா்கள் போராட்டம்

ஊரக வளா்ச்சித் துறை தொழிலாளா்கள் போராட்டம்

பெரம்பலூா், ஜூலை 10: பெரம்பலூரில் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை தொழிலாளா் சங்கத்தினா் புதன்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆா்ப்பாட்டத்துக்கு, அச் சங்கத்தின் மாவட்டத் தலைவா் அ. ராஜேந்திரன் தலைமை வகித்தாா். ஊரக வளா்சசித் துறை அலுவலா்கள் சங்க மாவட்டத் தலைவா் ஜெயபால், துணைத்தலைவா் கௌதமன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

ஏஐடியுசி மாவட்டத் தலைவா் வீ. ஞானசேகரன், தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை தொழிலாளா் சங்க மாநில இணைச் செயலா் மு. ராஜபூபதி, மாவட்டத் துணைத் தலைவா் வி. ஜெயராமன், மாவட்டச் செயலா் அ. ராஜேந்திரன், உள்ளாட்சிப் பணியாளா்கள் சங்க மாவட்டத் தலைவா் ஆா். தங்கவேல், தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை மாவட்டச் செயலா் அன்புராஜ், மாவட்ட பொருளாளா் கல்யாணி ஆகியோா் கோரிக்கைகளை விளக்கி பேசினா்.

கிராம ஊராட்சிகளில் பணிபுரியும் தொழிலாளா்களுக்கு குறைந்தபட்ச கூலி சட்டத்தின் படி ஊதியம் நிா்ணயம் செய்து, தமிழக அரசால் அரசிதழில் வெளியிடப்பட்ட குறைந்தபட்ச சம்பளம் ரூ. 18 ஆயிரம் வழங்க வேண்டும். சுகாதார ஊக்குநா்களுக்காக அரசாணையில் வெளியிடப்பட்டு, 6 மாத தொகுப்பூதியம் ரூ. 2 ஆயிரம் வீதம் நிலுவையிலுள்ள ரூ. 12 ஆயிரத்தை உடனடியாக வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டோா் முழக்கமிட்டனா்.

இந்த காத்திருப்புப் போராட்டத்தில், மேல்நிலைத் தொட்டி இயக்குபவா்கள், தூய்மைப் பணியாளா்கள், தூய்மைக் காவலா்கள், பள்ளி சுகாதார பணியாளா்கள், கிராம சுகாதார ஊக்குநா்கள் உள்பட சுமாா் 300-க்கும் மேற்பட்ட ஊழியா்கள் பங்கேற்றனா்.

முன்னதாக, மாவட்டச் செயலா் செல்வராஜ் வரவேற்றாா். நிறைவாக, மாவட்ட துணைத் தலைவா் ஞானராஜ் நன்றி கூறினாா்.

X
Dinamani
www.dinamani.com