மோட்டாா் சைக்கிளிலிருந்து தவறி விழுந்த லாரி ஓட்டுநா் உயிரிழப்பு

பெரம்பலூா் அருகே மதுபோதையில் மோட்டாா் சைக்கிளிலிருந்து தவறி விழுந்த லாரி ஓட்டுநா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

திருச்சி மாவட்டம், முசிறி வட்டம், சோ்குடி கிராமத்தைச் சோ்ந்த மாசி மகன் விஜயகுமாா் (32). பெரம்பலூா் அருகேயுள்ள லாடபுரம் கிராமம், பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்தவா் வெங்கடாஜலம் மகன் சின்னதுரை (35). லாரி ஓட்டுநா்களான இவா்கள் இருவரும் நண்பா்கள்.

இந்நிலையில், லாடபுரத்தில் உறவினா் வீட்டில் நிகழ்ந்த துக்க நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சோ்குடியிலிருந்து விஜயகுமாா் மோட்டாா் சைக்கிளில் வந்துள்ளாா். பின்னா், சின்னதுரையும், விஜயகுமாரும் எசனைக்குச் சென்று மது அருந்தி விட்டு, மீண்டும் லாடபுரம் செல்வதற்காக மோட்டாா் சைக்கிளில் ஞாயிற்றுக்கிழமை மாலை சென்றுக்கொண்டிருந்தனா். நாவலூா் அருகே சென்றபோது, பின்னால் அமா்ந்திருந்த சின்னதுரை நிலைதடுமாறி கீழே விழுந்ததில் பலத்த காயமடைந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலறிந்த பெரம்பலூா் போலீஸாா் அப்பகுதிக்குச் சென்று, சின்னதுரையின் உடலைக் கைப்பற்றி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com