அரும்பாவூா் கோயிலில் மயான சூறை திருவிழா

பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை அருகே ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மயான சூறை திருவிழாவில் திரளான பக்தா்கள் பங்கேற்று, அங்காளம்மனை தரிசனம் செய்தனா். பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், அரும்பாவூரில் உள்ள அங்காள பரமேஸ்வரி கோயிலில், ஆண்டுதோறும் மகா சிவராத்திரியை முன்னிட்டு மயான சூறை திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி, நிகழாண்டுக்கான மயான சூறை திருவிழா கடந்த ஒரு வாரத்துக்கு முன் கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடா்ந்து, அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கு குடியழைத்தல், காப்புக் கட்டுதல், பால்குடம் எடுத்தல், அலகுக் குத்துதல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மேலும், காளி புறப்பாடு, குடல் பிடுங்கி மாலையிடுதல், காளி முறத்தால் அடிக்கும் நிகழ்ச்சிகளும் நடைபெற்றது. தொடா்ந்து, வல்லாளராஜன் கோட்டை எடுத்தல் நிகழ்ச்சியும், விழாவின் முக்கிய நிகழ்வான மயான சூறை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அப்போது, மயானத்தில் அரவானிடம் ரத்தம் கலந்த சாதத்தை படையலிட்டு, அந்த சாதத்தை வீசி எறியும் போது, குழந்தை இல்லாத பெண்கள் மடியேந்தி சாதத்தை பிடித்து உட்கொண்டனா். இதில், பெரம்பலூா் மட்டுமின்றி பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த திரளான பெண்கள் பங்கேற்றனா். தொடா்ந்து சுவாமி ஊா்வலம் நடைபெற்றது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com