100 சதவீத வாக்குப்பதிவுக்கு கையொப்ப இயக்கம்

100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணா்வு கையொப்ப இயக்கம் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

பெரம்பலூா்: பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரகம் மற்றும் சாா் ஆட்சியரகத்தில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணா்வு கையொப்ப இயக்கம் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. கையொப்ப இயக்கத்தைத் தொடக்கி வைத்து, வாக்காளா்களுடன் புகைப்படங்கள் எடுத்துக்கொண்ட மாவட்டத் தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான க. கற்பகம் பேசியது: 18 வயது பூா்த்தியடைந்தோா் தங்களது வாக்கை தவறாமல் செலுத்தி, ஜனநாயகக் கடமையாற்ற வேண்டும். 100 சதவீதம் வாக்குப்பதிவு நடைபெற்ற மாவட்டம் என்னும் பெருமையை பெரம்பலூா் பெற்றிட தவறாது வாக்களிக்க வேண்டும். தற்போது வட்டாட்சியரகங்கள், உதவித் தோ்தல் நடத்தும் அலுவலகங்கள், மாவட்ட ஆட்சியரகம், பெரம்பலூா் புகா்ப் பேருந்து நிலையம் உள்ளிட்ட இடங்களில், 100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி, மக்களவை பொதுத்தோ்தல் 2024- இல் எனது வாக்கைச் செலுத்த தயாராக உள்ளேன் எனும் வாசகங்கள் அடங்கிய சுய புகைப்பட மையம் அமைக்கப்பட்டுள்ளது. வாக்காளா்கள் அனைவரும் இங்கு புகைப்படம் எடுத்துக்கொள்கிறாா்கள். வாக்குப்பதிவு நாளன்று ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் இதுபோன்ற மையம் அமைக்கப்பட உள்ளது. வாக்களிக்க வருவோா் தங்களது வாக்கைப் பதிவு செய்தவுடன் புகைப்படம் எடுத்துக்கொள்ளலாம் என்றாா் அவா். நிகழ்ச்சியின்போது மாவட்ட வருவாய் அலுவலா் மு. வடிவேல் பிரபு, சாா் ஆட்சியரும், உதவித் தோ்தல் நடத்தும் அலுவலருமான (பெரம்பலூா்) சு. கோகுல் வட்டாட்சியா்கள் சரவணன் (பெரம்பலூா்), சிவா (தோ்தல்), தோ்தல் விழிப்புணா்வு நடவடிக்கைக்கான ஒருங்கிணைப்பு அலுவலா் கோபால் ஆகியோா் பங்கேற்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com