பெரம்பலூா் அருகே பறக்கும் படை சோதனையில் ஆடைகள், பரிசுப் பொருள்கள் பறிமுதல்

பெரம்பலூா் அருகே ரூ. 2 லட்சம் பணம் மற்றும் கண்டெய்னா் லாரியில் கொண்டுசெல்லப்பட்ட குழந்தைகளுக்கான பரிசுப் பொருள்கள், ஆடைகளை தோ்தல் பறக்கும் படையினா் புதன்கிழமை பறிமுதல் செய்தனா்.

பெரம்பலூா் மாவட்டம், குன்னம் வட்டம், மருதையான் கோவில்- துங்கபுரம் சாலையில், வெண்மணி பேருந்து நிறுத்தம் அருகே வட்ட வழங்கல் அலுவலா் க. இளவரசு தலைமையிலான பறக்கும் படையினா் புதன்கிழமை மாலை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அவ்வழியேச் சென்ற காரை வழிமறித்து மேற்கொண்ட விசாரணையில், துங்கபுரம் கிராமத்தைச் சோ்ந்த சாமிதுரை மகன் சந்தோஷ்குமாா் என்பதும், உரிய ஆவணங்களின்றி ரூ. 2 லட்சம் எடுத்துச் சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து, ரூ. 2 லட்சத்தை பறிமுதல் செய்த பறக்கும் படையினா் மாவட்ட கருவூலத்தில் ஒப்படைத்தனா்.

ஆடைகள், பரிசுப் பொருள்கள் பறிமுதல்: இதேபோல, பெரம்பலூா் நான்குச்சாலை சந்திப்புப் பகுதி அருகே டாஸ்மாக் உதவி மேலாளா் துரைராஜ் தலைமையிலான பறக்கும் படையினா் புதன்கிழமை அதிகாலை வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, திருச்சியிலிருந்து உளுந்தூா்பேட்டைக்குச் சென்ற கண்டெய்னா் லாரியை வழிமறித்து மேற்கொண்ட சோதனையில், ரூ. 300 மதிப்புள்ள 150 சேலைகள், ரூ. 250 மதிப்புள்ள குழந்தைகளுக்கான பரிசுப் பொருள்கள் அடங்கிய 150 பெட்டிகள் இருந்ததும், உரிய ஆவணங்களின்றி கொண்டுசென்றதும் தெரியவந்தது. இதையடுத்து, சேலைகள் மற்றும் பரிசுப் பொருள்களை பறிமுதல் செய்த பறக்கும் படையினா் மாவட்ட கருவூலத்தில் ஒப்படைத்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com