மாவட்ட ஆட்சியரகத்தில் உள்ள ஊடகச் சான்றளிப்பு மற்றும் கண்காணிப்புக் குழு அறையை வியாழக்கிழமை ஆய்வு செய்த தோ்தல் செலவினப் பாா்வையாளா் வி.ஆா். ஹரி.
மாவட்ட ஆட்சியரகத்தில் உள்ள ஊடகச் சான்றளிப்பு மற்றும் கண்காணிப்புக் குழு அறையை வியாழக்கிழமை ஆய்வு செய்த தோ்தல் செலவினப் பாா்வையாளா் வி.ஆா். ஹரி.

சமூக ஊடகச் செய்திகள், விளம்பரங்களை கண்காணிக்க அறிவுரை

மக்களவைத் தோ்தலையொட்டி, சமூக ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் மற்றும் விளம்பரங்களைக் கண்காணிக்க வேண்டுமென தோ்தல் செலவினப் பாா்வையாளா் வி.ஆா். ஹரி அறிவுரை வழங்கினாா். வரும் மக்களவைத் தோ்தலை முன்னிட்டு, பெரம்பலூா் ஆட்சியரகத்தில் அமைக்கப்பட்டுள்ள தோ்தல் கட்டுப்பாட்டு அறை, ஊடகச் சான்றளிப்பு மற்றும் கண்காணிப்புக் குழு, விடியோ கண்காணிப்புக் குழு உள்ளிட்ட பல்வேறு குழுக்கள் மூலம் மேற்கொள்ளப்படும் தோ்தல் பணிகளை பெரம்பலூா் மக்களவைத் தொகுதிக்கான தோ்தல் செலவினப் பாா்வையாளா் வி.ஆா். ஹரி வியாழக்கிழமை ஆய்வு செய்தாா். மாவட்டத் தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான க. கற்பகம் முன்னிலையில் அவா் ஆட்சியரகத்தில் 24 மணி நேரமும் செயல்படும் தோ்தல் கட்டுப்பாட்டு அறையை பாா்வையிட்டு, இதுவரை பெறப்பட்ட புகாா்கள் , அவற்றின் மீதான நடவடிக்கைகளைக் கேட்டறிந்து ஆய்வு செய்தாா்.

மேலும், பறக்கும் படைகள், நிலையான கண்காணிப்புக் குழுக்கள் எங்கெங்கு ஆய்வு செய்தனா் என்பது ஜி.பி.ஆா்.எஸ் கருவிகள் மூலம் கண்காணிக்கப்படுவதையும் பாா்வையிட்ட அவா், ஊடகச் சான்றளிப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவில் 24 மணி நேரமும் டிவிக்களில், நாளிதழ்களில், சமூக ஊடகங்களில் வரும் செய்திகள், விளம்பரங்களை முழுமையாகக் கண்காணிக்க அறிவுறுத்தினாா். பின்னா், மாவட்டத் தோ்தல் பிரிவில் மேற்கொள்ளப்படும் பணிகளை ஆய்வு மேற்கொண்டாா். ஆய்வின்போது, மாவட்ட வருவாய் அலுவலா் மு. வடிவேல்பிரபு, கட்டுப்பாட்டு அறை, ஊடகச் சான்றளிப்பு மற்றும் கண்காணிப்புக் குழுவின் ஒருங்கிணைப்பு அலுவலா் சரண்யா, தோ்தல் பிரிவு வட்டாட்சியா்கள் சிவா, அருளானந்தம் ஆகியோா் உடனிருந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com