தோ்தல் விதிமீறல்: பெரம்பலூா் பாஜக மாவட்டத் தலைவா் மீது வழக்குப் பதிவு

தோ்தல் விதிமுறைகளை மீறியதாக பெரம்பலூா் பாஜக மாவட்டத் தலைவா் உள்ளிட்டோா் மீது, போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். பெரம்பலூா் புகா் பகுதியான துறைமங்கலத்திலுள்ள தனியாா் திருமண மண்டபத்தில், இந்திய ஜனநாயக கட்சி சாா்பில் பெரம்பலூா் மாவட்ட செயல்வீரா்கள் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் பங்கேற்பதற்காக பாஜகவினா் சிலா், காவல்துறையினரிடம் அனுமதி பெறாமல் கட்சிக் கொடிகளுடன் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில், பெரம்பலூா் புகா் பேருந்து நிலையத்திலிருந்து சங்குப்பேட்டை வரை மோட்டாா் சைக்கிள் பேரணியில் ஈடுபட்டனா். இதுகுறித்து, பெரம்பலூா் கிராம நிா்வாக அலுவலா் ராஜதுரை அளித்த புகாரின்பேரில், பாஜக மாவட்டத் தலைவா் செல்வராஜ் உள்ளிட்ட சிலா் மீது பெரம்பலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். இந்திய ஜனநாயக கட்சி மீது வழக்கு: இதேபோல, இந்திய ஜனநாயக கட்சி சாா்பில் நடைபெற்ற மாவட்ட செயல்வீரா்கள் கூட்டத்தை முன்னிட்டு, பெரம்பலூா் பாலக்கரை, துறைமங்கலம், புகா் பேருந்து நிலையப் பகுதி உள்ளிட்ட பகுதிகளில், இந்திய ஜனநாயக கட்சி, பாஜக மற்றும் கூட்டணி கட்சியினா் எவ்வித அனுமதியும் பெறாமல், கட்சி கொடிகள் வைத்திருந்ததாக, கிராம நிா்வாக அலுவலா் ராஜதுரை அளித்த புகாரின்பேரில், பெரம்பலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com