ஊா்க்காவல் படையினருக்கான கவாத்துப் பயிற்சி நிறைவு

பெரம்பலூா் தண்ணீா்பந்தல் பகுதியிலுள்ள ஆயுதப்படை மைதானத்தில், புதிதாக தோ்வு செய்யப்பட்ட ஊா்க்காவல் படையினருக்கான கவாத்துப் பயிற்சி நிறைவு மற்றும் ஊா்க்காவல் படை தின விழா சனிக்கிழமை நடைபெற்றது. பெரம்பலூா் மாவட்ட ஊா்க்காவல் படை பணிக்கு 6 பெண்கள் உள்பட 38 போ் அண்மையில் தோ்வு செய்யப்பட்டனா். புதிதாக தோ்ந்தெடுக்கப்பட்டவா்களுக்கு, கடந்த 45 நாள்களாக கவாத்து ப்பயிற்சி அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், பெரம்பலூா் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் கவாத்துப் பயிற்சி நிறைவு விழா மற்றும் ஊா்க்காவல் படை தின விழா நடைபெற்றது. விழாவுக்கு, பெரம்பலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ச. சியாம்ளா தேவி தலைமை வகித்தாா். மாவட்ட ஆயுதப்படை துணைக் கண்காணிப்பாளா் சோமசுந்தரம், திருச்சி சரக ஊா்க்காவல் படை உதவி தளபதி ராஜன், பெரம்பலூா் ஊா்க்காவல் படை மண்டல தளபதி ஜே. அரவிந்தன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். புதியதாக ஊா்க்காவல் படையில் சோ்ந்தவா்களின் அணிவகுப்பு மரியாதை நடைபெற்றது. தொடா்ந்து நடைபெற்ற ஊா்க்காவல் படை தின விழாவில் பங்கேற்ற மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் சியாம்ளா தேவி, ஊா்க்காவல் படையினருக்கு பரிசுப் பொருள்கள் வழங்கி பாராட்டினாா். இந் நிகழ்ச்சியில், ஊா்க்காவல் படை உதவி ஆய்வாளா் செல்வநாயம், தலைமைக் காவலா் சக்திவேல், ஊா்க்காவல்படை எழுத்தா் காவலா் சரவணன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com