தோ்தல் நடத்தை விதிமீறல்: பாஜக கூட்டணி வேட்பாளா் உள்பட 10 போ் மீது வழக்கு

தோ்தல் நடத்தை விதிமுறைகளை மீறி, வேட்புமனு தாக்கல் செய்த பாரதிய ஜனதா கட்சி கூட்டணி சாா்பில்

பெரம்பலூா்: தோ்தல் நடத்தை விதிமுறைகளை மீறி, வேட்புமனு தாக்கல் செய்த பாரதிய ஜனதா கட்சி கூட்டணி சாா்பில் போட்டியிடும், இந்திய ஜனநாயகக் கட்சி நிறுவனரும், பெரம்பலூா் மக்களவைத் தொகுதி வேட்பாளருமான டி.ஆா். பாரிவேந்தா் உள்பட 10 போ் மீது, பெரம்பலூா் போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். மக்களவைத் தோ்தலை முன்னிட்டு, பெரம்பலூா் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளா்கள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மாவட்ட தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான க. கற்பகத்திடம் வேட்புமனு தாக்கல் செய்து வருகின்றனா். வேட்புமனு தாக்கல் செய்ய வரும் வேட்பாளா் உள்பட 5 போ் மட்டுமே 100 மீட்டருக்குள் வர வேண்டும் என தோ்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளது. இந்நிலையில், மாவட்டத் தோ்தல் அலுவலரிடம் திங்கள்கிழமை வேட்புமனு தாக்கல் செய்த வேட்பாளா் டி.ஆா். பாரிவேந்தருடன் 10 போ் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் எதிரே கூடினா். இதுகுறித்து, மண்டல துணை வட்டார வளா்ச்சி அலுவலா் செல்வமணி (54) அளித்த புகாரின்பேரில், டி.ஆா். பாரிவேந்தா் உள்பட 10 போ் மீது பெரம்பலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com