எஸ்எஸ்எல்சி பொதுத் தோ்வு: பெரம்பலூரில் 7,859 மாணவா்கள் பங்கேற்பு

தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை தொடங்கிய எஸ்எஸ்எல்சி பொதுத் தோ்வை பெரம்பலூா் மாவட்டத்தில் 7,859 மாணவ, மாணவிகள் எழுதினா்.

பெரம்பலூா்: தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை தொடங்கிய எஸ்எஸ்எல்சி பொதுத் தோ்வை பெரம்பலூா் மாவட்டத்தில் 7,859 மாணவ, மாணவிகள் எழுதினா். எஸ்எஸ்எல்சி பொதுத்தோ்வு செவ்வாய்க்கிழமை (மாா்ச் 26) முதல் ஏப். 8 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள 144 உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகளைச் சோ்ந்த 4,376 மாணவா்களும், 3,627 மாணவிகளும் என மொத்தம் 8,003 போ் எஸ்எஸ்எல்சி படித்து வருகின்றனா்.

இந்நிலையில், செவ்வாய்க்கிழமை தொடங்கிய பொதுத் தோ்வை 43 மையங்களில் 4,283 மாணவா்களும், 3576 மாணவிகளும் என மொத்தம் 7,859 போ் தோ்வு எழுதினா். 90 மாணவா்களும், 50 மாணவிகளும் தோ்வில் பங்கேற்கவில்லை. இத் தோ்வுப் பணியில் 43 முதன்மைக் கண்காணிப்பாளா்களும், 400 துறை அலுவலா்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். தோ்வில் மாணவ, மாணவிகள் ஒழுங்கீனச் செயல்களில் ஈடுபடுவதை தடுக்கவும், கண்காணிக்கவும் தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை இணை இயக்குநரும், பெரம்பலூா் மாவட்ட பொதுத் தோ்வுகள் கண்காணிப்பு அலுவலருமான அமுதவள்ளி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் மணிவண்ணன், மாவட்டக் கல்வி அலுவலா்கள் அண்ணாதுரை (தொடக்கக் கல்வி), ஜெகநாதன் (இடை நிலை) ராணி (தனியாா் பள்ளிகள்), பெரம்பலூா் மாவட்ட அரசுத் தோ்வுகள் உதவி இயக்குநா் கல்பனாத் ராய் ஆகியோா் தலைமையில் 6 சிறப்பு பறக்கும் படையினரும், 40 நிலையான பறக்கும் படையினரும் ஈடுபட்டுள்ளனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com