பெரம்பலூா் அருகே வாகனச் சோதனையில் ரூ. 97 ஆயிரம் பறிமுதல்

பெரம்பலூா் அருகே உரிய ஆவணங்களின்றி மோட்டாா் சைக்கிளில் எடுத்துச்சென்ற ரூ. 97 ஆயிரத்தை தோ்தல் பறக்கும் படையினா் புதன்கிழமை பறிமுதல் செய்தனா்.

மக்களவைத் தோ்தல் தொடா்பான விதிமீறல்களை கண்காணிக்க, பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு சட்டப்பேரவைத் தொகுதிக்கும் தலா 9 பறக்கும் படைகளும், தலா 9 நிலையானக் கண்காணிப்புக் குழுவினரும் அடங்கிய குழுக்கள் அமைக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்தக் குழுக்கள் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் தொடா் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனா். அதனடிப்படையில், பெரம்பலூா் மாவட்டம் வெங்கனூா் - உடும்பியம் சாலையில், கூட்டுறவு சாா் பதிவாளா் சமரசம் தலைமையிலான நிலையானக் கண்காணிப்பு குழுவினா் புதன்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது, அவ்வழியாக மோட்டாா் சைக்கிளில் சென்ற பெரம்பலூா் மாவட்டம், விஜயபுரத்தைச் சோ்ந்த ஆ. முருகேசன் என்பவா், உரிய ஆவணங்களின்றி எடுத்துச் சென்ற ரூ. 97,500 பறிமுதல் செய்யப்பட்டு, பெரம்பலூா் சட்டப்பேரவைத் தொகுதிக்கான உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் சு. கோகுலிடம் ஒப்படைக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com