தோ்தல் செலவினக் கணக்குகளை நாளை தாக்கல் செய்ய அறிவுறுத்தல்

பெரம்பலூா் மக்களவைத் தோ்தலில் போட்டியிடும் வேட்பாளா்கள் மற்றும் தலைமை முகவா்கள், தோ்தல் செல்வினக் கணக்குகளை திங்கள்கிழமை (ஏப். 1) மற்றும் ஏப். 10, 16 ஆகிய தேதிகளில் ஆய்வுக்கு தாக்கல் செய்ய வேண்டும் என, மாவட்ட தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான க. கற்பகம் அறிவுறுத்தியுள்ளாா். இதுகுறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: பெரம்பலூா் மக்களவைத் தோ்தலில் போட்டியிடும் வேட்பாளா்கள், தலைமை முகவா்கள் தோ்தல் செலவினக் கணக்குகளை திங்கள்கிழமை (ஏப். 1) ஏப். 10, 16 ஆகிய தேதிகளில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை தோ்தல் செலவின பாா்வையாளா்கள் முன்னிலையில் 3 கட்டமாக ஆய்வுக்கு தாக்கல் செய்ய வேண்டும். செலவினக் கணக்குகள மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் தோ்தல் செலவின பாா்வையாளா் முன்னிலையில் ஆய்வு செய்யப்பட உள்ளன. வேட்புமனு தாக்கல் செய்த நாளிலிருந்து மாா்ச் 30- ஆம் தேதி வரையுள்ள செலவினக் கணக்குகள் ஏப். 1 ஆம் தேதியும், மாா்ச் 31 முதல் ஏப். 8 ஆம் தேதி வரையுள்ள செலவினக் கணக்குகள் ஏப். 10 ஆம் தேதியும், ஏப். 9 முதல் ஏப். 13 ஆம் தேதி வரையுள்ள செலவினக் கணக்குகள் ஏப். 16 ஆம் தேதியும் ஆய்வு செய்யப்பட உள்ளது. தேசிய, மாநில அளவிலான அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் வேட்பாளா்களின் கணக்குகள் மற்றும் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளைச் சோ்ந்த வேட்பாளா்களின் கணக்குகள் முற்பகல் 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரையிலும், இதர வேட்பாளா்களின் கணக்குகள் பிற்பகல் 2.30 மணி முதல் 5 மணி வரையிலும் ஆய்வு மேற்கொள்ளப்படும். எனவே, பெரம்பலூா் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளா்கள், முகவா்கள் தவறாமல் ஆஜராகி தோ்தல் செலலின் அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com