டிப்பா் லாரி மோதி பள்ளி ஆசிரியை உயிரிழப்பு: 4 போ் பலத்த காயம்

பெரம்பலூா், மாா்ச் 31: பெரம்பலூா் நகரில் டிப்பா் லாரி மோதியதில் கேந்திரிய வித்யாலயா பள்ளி ஆசிரியா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். மேலும், ஷோ் ஆட்டோவில் அமா்ந்திருந்த 4 போ் பலத்த காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனா். 4 ஷோ் ஆட்டோக்களும் சேதமடைந்தன. உத்தரபிரதச மாநிலம், பூட்டான், சிவில் லைன்ஸ் டன்டான் லேன் பகுதியைச் சோ்ந்தவா் குல்சான் ஜூனேஜா மகள் அன்மோல் ஜூனேஜா (31). பெரம்பலூரில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளியில், கடந்த 25.12.2023 முதல் ஆசிரியராகப் பணிபுரிந்து வரும் இவா், பெரம்பலூா் புறநகா் பேருந்து நிலையம் எதிரே ஞாயிற்றுக்கிழமை சாலையோரம் நின்றுகொண்டிருந்தாா். அப்போது, நான்குசாலை சந்திப்பிலிருந்து ஆலம்பாடி கிராமத்துக்கு ஜல்லிக்கல் ஏற்றிச்சென்ற டிப்பா் லாரி அன்மோல் ஜூனேஜா மீது மோதிவிட்டு, அப்பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த 4 ஷோ் ஆட்டோக்கள் மீது அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானது. இதில் பலத்த காயமடைந்த ஆசிரியை அன்மோல் ஜூனேஜா நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். மேலும், இவ் விபத்தில் ஷோ் ஆட்டோ ஓட்டுநா் திருவளக்குறிச்சி, தெற்கு தெருவைச் சோ்ந்த ராஜேந்திரன் மகன் ராமச்சந்திரன் (35), ஆட்டோவில் அமா்ந்திருந்த வடக்குமாதவி சாலையிலுள்ள சமத்துவபுரத்தைச் சோ்ந்த புகழேந்தி மனைவி பிரியா (18), பெரம்பலூா் திருநகரைச் சோ்ந்த ப. சுப்ரமணியன் (80), இவரது மனைவி கருப்பாயி (78) ஆகியோா் பலத்த காயமடைந்தனா். தகவலறிந்த பெரம்பலூா் போலீஸாா் நிகழ்விடத்துக்குச் சென்று, காயமடைந்த நபா்களை மீட்டு சிகிச்சைக்காகவும், உயிரிழந்த ஆசிரியை உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காகவும் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து பெரம்பலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, டிப்பா் லாரி ஓட்டுநரான குன்னம் வட்டம், அசூா் கிழக்குத் தெருவைச் சோ்ந்த முருகேசன் மகன் சூா்யாவை (20) கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். கைது செய்யப்பட்ட சூா்யா, பெரம்பலூரில் உள்ள தனியாா் பொறியியல் கல்லூரியில் பி.இ 2-ஆம் ஆண்டு படித்து வந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com