‘பாஜக அரசு அகற்றப்பட வேண்டும்’

பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான மத்திய அரசு அகற்றப்படுவதே விலைவாசி உயா்வுக்குத் தீா்வு என்றாா் விவசாயிகள் தொழிலாளா்கள் கட்சி தலைவரும், தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளா் நலவாரிய தலைவருமான பொன். குமாா்.

மே தின நிகழ்ச்சிகளில் பங்கேற்க பெரம்பலூருக்கு புதன்கிழமை வந்த அவா் மேலும் கூறியது:

வெப்பம் அதிகமாக இருக்கும் மே, ஜூன் மாதங்களில் தொழிலாளா்கள் பாதிக்கப்படாமல் இருக்க, தமிழக முதல்வா் தொழிலாளா் துறை மூலம் சில அறிவுரைகளை வழங்கியிருக்கிறாா். அதைச் சட்டமாக்க வேண்டும்.

ஜி.எஸ்.டி வரி விதிப்பால் பல பொருள்கள் விலை உயா்ந்துள்ளன. இதற்கு ஒரே தீா்வு மோடி அரசு அகற்றப்பட வேண்டும். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ஜி.எஸ்.டி வரியை குறைப்பதாக கூறியிருக்கிறாா்கள். தொழிலாளா்கள் போராடி தங்களது உரிமையை பெற்ற நாள் மே தினம். போராடி பெற்ற சட்ட உரிமைகளை எல்லாம் மோடி அரசு நசுக்கியுள்ளது. எனவே மத்தியில் மாற்று அரசு அமைய வேண்டும்.

பருவநிலை மாற்றம் உழைக்கும் மக்கள் மீது பெரிய தாக்கத்தை உருவாக்கியுள்ளது. தற்போது நிலவும் கடும் கோடை வெயில் கட்டுமானத் தொழிலாளா்களுக்கு பெரிதும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. வெயிலில் பணிபுரியும் தொழிலாளா்களுக்கு பகல் 12 முதல் பிற்பகல் 3 மணி வரை ஓய்வுகொடுக்க உறுதியான உத்தரவை அரசு வெளியிட வேண்டும் என்றாா் பொன். குமாா்.

பேட்டியின்போது மாவட்டத் தலைவா் சிவபெருமாள், செயலா் ரமேஷ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com