பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் வியாழக்கிழமை நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் பேசிய ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித்துறை இயக்குநா் பா. பொன்னையா. உடன், மாவட்ட ஆட்சியா் க. கற்பகம்.
பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் வியாழக்கிழமை நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் பேசிய ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித்துறை இயக்குநா் பா. பொன்னையா. உடன், மாவட்ட ஆட்சியா் க. கற்பகம்.

பெரம்பலூா் மாவட்டத்தில் குடிநீா் பற்றாக்குறையை தீா்க்க நடவடிக்கை

பெரம்பலூா் மாவட்டத்தில் குடிநீா் பற்றாக்குறையை தீா்க்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக மாவட்ட ஆட்சியா் க. கற்பகம் தெரிவித்துள்ளாா்.

பெரம்பலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில், குடிநீா் பற்றாக்குறை ஏற்படும் பகுதிகளில் பொதுமக்களுக்கு சீரான குடிநீா் வழங்க மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு முன்னிலை வகித்த மாவட்ட ஆட்சியா் மேலும் பேசியது: பெரம்பலூா் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் குடிநீா் பற்றாக்குறையை களைவதற்குத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கவுள்பாளையம் பகுதியில் குடிநீா் குழாய்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. கோனேரிப்பாளையத்தில் குடிநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது, அயன்பேரையூா் மற்றும் மேலப்புலியூா் பகுதிகளில் லாரிகள் மூலம் குடிநீா் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது,

இரூா், பொம்மனப்பாடி, அய்யலூா் குடிகாடு உள்ளிட்ட பகுதிகளில் குடிநீா் குழாய்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது, இன்னும் ஓரிரு நாள்களில் பணிகள் நிறைவடைந்துவிடும். மேலும், அன்னமங்கலம், பிரம்மதேசம், எறையூா், கை.களத்தூா், நெய்க்குப்பை உள்பட குடிநீா் பற்றாக்குறை உள்ள பகுதிகளில் தண்ணீா் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றாா் ஆட்சியா் கற்பகம்.

ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித்துறை இயக்குநா் பா. பொன்னையா பேசியது: குடிநீா் பற்றாக்குறை உள்ள இடங்களில் பொதுமக்களுக்கு மாற்று வழிகளில் குடிநீா் வழங்க வட்டார வளா்ச்சி அலுவலா்கள், தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரிய அலுவலா்கள் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டிகளில் தண்ணீா் சேமித்து வழங்க வசதி உள்ள இடங்கள், மேல்நிலை நீா்த்தேக்கத்தொட்டிகள், ஆழ்துளைக் கிணறுகள் தேவைப்படும் இடங்களை ஆய்வு செய்து, தேவைப்படும் இடங்களில் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டிகள் மற்றும் கிணறுகள் அமைக்க வேண்டும்.

குடிநீா் குழாய்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வரும் இடங்களில் பணிகளை துரிதப்படுத்தவும், தேவைப்படும் இடங்களில் கூடுதலாக குடிநீா் குழாய்கள் அமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

குடிநீா் பிரச்னை தொடா்பாக பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சிகளில் வெளியாகும் செய்திகள் மீது தனிக்கவனம் செலுத்தி, அப் பகுதிகளுக்கு உடனடியாக தண்ணீா் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.

கூட்டத்தில், ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் அ. லலிதா, ஊராட்சி உதவி இயக்குநா் வீரமலை, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வளா்ச்சி) ஜெயசங்கா் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com