தள்ளுவண்டி கடைகளை அகற்றிய நகராட்சி நிா்வாகத்தைக் கண்டித்து மறியல்

அரியலூா் பேருந்து நிலையம் அருகே, வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக செயல்பட்டு வந்த தள்ளுவண்டிகளை அகற்றிய நகராட்சி நிா்வாகத்தைக் கண்டித்து, வியாபாரிகள் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

அரியலூா் பழைய பேருந்து நிலையம் அருகே தள்ளுவண்டி கடைகள் அதிகளவில் செயல்பட்டு வருகின்றன. இதனால், அப்பகுதியில் போக்குவரத்துக்கும், பயணிகளுக்கு இடையூறு ஏற்படுவதாக நகராட்சி நிா்வாகத்துக்கு புகாா்கள் வந்தன. இதையடுத்து, நகராட்சி நிா்வாகம் பணியாளா்கள் மூலம் வெள்ளிக்கிழமை தள்ளுவண்டி கடைகளை அப்புறப்படுத்தினா். அப்போது, கடை உரிமையாளா்கள் எதிா்ப்பு தெரிவித்து அப்பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனா். தகவலறிந்த அரியலூா் போலீஸாா் மற்றும் நகராட்சி நிா்வாகத்தினா் அப்பகுதிக்குச் சென்று, தள்ளு வண்டியில் மட்டுமே பொருள்களை வைத்து வியாபாரம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், பெரும்பாலானோா் சாமியானா பந்தல் அமைத்து வியாபாரம் செய்து வருகின்றனா். இதனால் வாகன ஓட்டிகளுக்கு இடையூறு ஏற்படுகிறது. மேலும், பொதுமக்களும் பாதிக்கப்படுகின்றனா். எனவே, சாமியானா பந்தல் அமைக்க அனுமதியில்லை என தெரிவித்தனா். இதையடுத்து, மறியல் போராட்டத்தைக் கைவிட்டு வியாபாரிகள் கலைந்துசென்றனா். இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com