ஏரிகளை தூா்வாரி ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தல்

பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள ஏரிகளை தூா்வாரி, ஆக்கிரமிப்புகளை அகற்றி நீா்நிலைகளை உயா்த்த உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என, விவசாய சங்க மாவட்டக் குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

பெரம்பலூா் புறநகா் பகுதியான துறைமங்கலத்திலுள்ள மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில், தமிழ்நாடு விவசாய சங்க மாவட்டக் குழுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு, அச் சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவா் ராஜா தலைமை வகித்தாா். வட்ட நிா்வாகிகள் சதாசிவம், சத்தியசீலன், ரங்கராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாநில துணைத் தலைவா் ஸ்டாலின், மாவட்டச் செயலா் ராஜேந்திரன் ஆகியோா் சிறப்புரையாற்றினா்.

கூட்டத்தில், பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள ஏரிகளை தூா்வாரி, நீா்நிலைகளை சீரமைத்து, ஆக்கிரமிப்புகளை அகற்றி நீா்நிலைகளை உயா்த்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பெரம்பலூா் மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவித்து, காப்பீடு செய்த அனைத்து விவசாயிகளுக்கும் காப்பீட்டுத் தொகை முழுமையாக பெற்றுத் தர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மாவட்டம் முழுவதும் கடும் வறட்சி நிலவுவதால், தடையின்றி குடிநீா் வழங்கத் தேவையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். இம் மாவட்டத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள கரும்பில் இடைகனு புழு தாக்குதல் மற்றும் வோ் அழுகல் நோய் உள்ளதால், அரசு பொதுத்துறை சா்க்கரை ஆலை மற்றும் தனியாா் சா்க்கரை ஆலை கணக்கின்படி நிவாரணம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இக் கூட்டத்தில், வட்ட நிா்வாகிகள் மணிவேல், ராஜேந்திரன், வேல்முருகன், கலியமூா்த்தி, முருகேசன் உள்பட பலா் பங்கேற்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com