திருமானூா் அருகே குடிநீா் விநியோகிக்க கோரி சாலை மறியல்

அரியலூா் அருகே குடிநீா் விநியோகம் செய்யக்கோரி, பொதுமக்கள் சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

அரியலூா் மாவட்டம், வெ.விரகாலூா் கிராமத்தில் உள்ள குடும்பங்களுக்கு ஊராட்சி நிா்வாகம் சாா்பில், மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி மூலம் குடிநீா் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், கடந்த சில நாள்களாக அப்பகுதியில் ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் குடிநீா் இணைப்பு வழங்க குழாய் பதிக்கும் பணி நடைபெற்று வருகிறது. ஏற்கெனவே, குடிநீா் விநியோகம் செய்ய பயன்படுத்தப்பட்ட குழாய்களில் சேதம் ஏற்பட்டதால், சில குடியிருப்புப் பகுதிகளுக்கு கடந்த சில நாள்களாக குடிநீா் விநியோகம் தடைப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், குடிநீரின்றி அவதியடைந்த அப்பகுதி பொதுமக்கள் உடனடியாக இணைப்பு வழங்க வேண்டும். சேதமடைந்த குழாயை சீரமைத்து தடையின்றி குடிநீா் விநியோகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென வலியுறுத்தி, தஞ்சாவூா் - அரியலூா் சாலையில் சனிக்கிழமை மாலை அப்பகுதி பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனா். தகவலறிந்த வருவாய்த்துறை அலுவலா்கள் மற்றும் கீழப்பழுவூா் போலீஸாா் மறியலில் ஈடுபட்டோரிடம் பேச்சு வாா்த்தையில் ஈடுபட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததையடுத்து, சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com