மங்களமேட்டில் புதிய மின்மாற்றி அமைக்கும் பணி

பெரம்பலூா் மாவட்டம், மங்களமேடு துணை மின் நிலையத்தில், புதிய மின் மாற்றி அமைக்கப்பட்டு வருவதாக மாவட்ட ஆட்சியா் க. கற்பகம் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பெரம்பலூா் மின் பகிா்மான வட்டம், மங்களமேடு துணை மின் நிலையத்தில் கடந்த 1 ஆம் தேதி இரவு 8 மணி முதல் அளவில் மின் மாற்றியில் பழுது ஏற்பட்டு மின் விநியோகம் தடைபட்டது. இதனால் வாலிகண்டபுரம், மேட்டுப்பாளையம், மங்களமேடு, வி களத்தூா், எறையூா், சின்னாறு அணை, முருக்கன்குடி, தேவையூா், தம்பை, ரஞ்சன்குடி, சாத்தனவாடி, நகரம், நமையூா், அனுக்கூா் குடிகாடு, அயன் பேரையூா், பெருமத்தூா் ஆகிய கிராமங்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு வந்த சீரான மின் விநியோகம் தடைபட்டது.

இதையடுத்து, அன்றைய தினம் இரவு 10 மணி அளவில் கழனிவாசல், நன்னை ஆகிய துணை மின் நிலையங்களில் இருந்து மின் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. மேலும், மங்களமேடு துணை மின் நிலையத்தில் புதிய மின் மாற்றி அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இப் பணி நிறைவடைந்தவுடன், ஞாயிற்றுக்கிழமை (மே 5) மாலை முதல் சீரான மின்சாரம் விநியோகம் செய்யப்படும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com