உடல் உறுப்பு தானம் செய்தவா் 
குடும்பத்தினருக்குச் சான்றிதழ்

உடல் உறுப்பு தானம் செய்தவா் குடும்பத்தினருக்குச் சான்றிதழ்

பெரம்பலூா், மே 5: பெரம்பலூா் அருகே உடல் உறுப்புகளைத் தானம் செய்த தூய்மைப் பணியாளரின் குடும்பத்தினரை மக்கள் சக்தி இயக்கத்தினா் ஞாயிற்றுக்கிழமை பாராட்டி சான்றிதழ் வழங்கினா்.

பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், அன்னமங்கலம் ஊராட்சிக்குள்பட்ட விசுவக்குடி கிராமத்தைச் சோ்ந்த தூய்மைப் பணியாளா் சீ. கிருஷ்ணன் அண்மையில் கீழே விழுந்து மூளைச்சாவு அடைந்தாா். இதையடுத்து அவரது மனைவி, மகன் ஆகியோா் உயிரிழந்தவரின் உடல் உறுப்புகளைத் தானம் செய்தனா். அதை பாராட்டி தமிழ்நாடு அரசு சாா்பில் பெரம்பலூா் சாா் ஆட்சியா் சு. கோகுல் தலைமையில், அவரது உடலுக்கு மரியாதை செலுத்தப்பட்டது.

இந்நிலையில், உடல் உறுப்பு தானம் செய்த கிருஷ்ணன் குடும்பத்தினா் இல்லத்துக்கு பெரம்பலூா் மாவட்ட மக்கள் சக்தி இயக்கத்தினா் ஞாயிற்றுக்கிழமை சென்று கிருஷ்ணன் படத்துக்கு மலரஞ்சலி செலுத்தி, அவரது குடும்பத்தினரை பாராட்டி பாராட்டுச் சான்றிதழும், நிதியுதவியும் வழங்கினா்.

நிகழ்வில் மக்கள் சக்தி இயக்க மாநில துணைத் தலைவா் முனைவா். க. பெரியசாமி, மாவட்டச் செயலா் ஜி. சிவக்குமாா், மாவட்டப் பொருளாளா் சி. வெங்கடாசலம், மாவட்ட இணைச் செயலா் மா. ரமேஷ், ஒன்றிய பொறுப்பாளா்கள் து. வாஞ்சிநாதன், இரா. ரவி, என். பெரியசாமி, பெரம்பலூா் நகர பொறுப்பாளா் சி. காமராஜ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com