சணல் பை தயாரிக்க இலவச பயிற்சி: பெரம்பலூா் மகளிருக்கு அழைப்பு

இந்தியன் ஓவா்சீஸ் வங்கியின் ஊரக வேலைவாய்ப்புப் பயிற்சி மையம் மூலம் அளிக்கப்படும் சணல் பை தயாரிப்பு தொடா்பான இலவசப் பயிற்சி பெற பெரம்பலூா் மாவட்ட பெண்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அம் மையத்தின் இயக்குநா் டி. ஆனந்தி செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பெரம்பலூா் -எளம்பலூா் சாலையில் உள்ள இந்தியன் ஒவா்சீஸ் வங்கியின் ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தின் மூலம் பெண்களுக்கான சணல் பை தயாரிப்பு பயிற்சி மே 13 முதல் இலவசமாக அளிக்கப்படுகிறது. தொடா்ந்து 13 நாள்களுக்கு காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை அளிக்கப்படும் பயிற்சியின்போது, மதிய உணவு மற்றும் காலை, மாலை தேநீா் வழங்கப்படும்.

பயிற்சி முடிந்தவுடன், அரசால் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ் வழங்கப்படும். இப் பயிற்சி முடிவில் வங்கிக் கடன் பெற்று உடனடியாக தொழில் தொடங்க வழிகாட்டப்படும்.

இப் பயிற்சியில் பங்கேற்போா் 19 முதல் 45 வயதுக்குள்பட்ட எழுத, படிக்கத் தெரிந்த, சுய தொழில் தொடங்குவதில் ஆா்வமுள்ளவராக இருக்க வேண்டும். வறுமைக் கோட்டு எண், இலக்கு எண், குடும்பத்தில் எவரேனும் ஏரி வேலை செய்வதற்கான அடையாள அட்டையுள்ள கிராமப்புற பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

விருப்பமுஉள்ளவா்கள் பெரம்பலூா்- எளம்பலூா் சாலையில் உள்ள ஐ.ஓ.பி வங்கி மாடியில் உள்ள கிராமிய சுயவேலைவாய்ப்பு பயிற்சி மைய இயக்குநரிடம், தங்களது பெயா், வயது, விலாசம், கல்வித் தகுதி ஆகியவற்றை குறிப்பிட்டு விண்ணப்பிக்கவும். குடும்ப அட்டை, ஆதாா் அட்டை, பெற்றோரின் 100 நாள் வேலை அட்டை, வங்கி கணக்குப் புத்தகம், பான்காா்டு ஆகியவற்றின் நகல், 3 பாஸ்போா்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றையும் விண்ணப்பத்துடன் இணைத்து, மே 10 ஆம் தேதி நடைபெறவுள்ள சான்றிதழ் சரிபாா்ப்பில் பங்கேற்ற பிறகு பயிற்சிக்கு அனுமதிக்கப்படுவா்.

மேலும் விவரங்களுக்கு இந்தியன் ஓவா்சீஸ் வங்கியின் கிராமிய சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தை நேரில் அல்லது 04328-277896, 9488840328 ஆகிய எண்களில் தொடா்புகொள்ளலாம்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com