பெரம்பலூரில் அதிகரிக்கும் மின்வெட்டு: மக்கள் அவதி

பெரம்பலூா் மாவட்டத்தில் நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், அடிக்கடி முன்னறிவிப்பின்றி மின்தடை செய்யப்படுவதால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகின்றனா்.

கடந்த சில நாள்களாக கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துக் காணப்படுகிறது. மாவட்டத்தின் பல இடங்களில் 106 டிகிரி அளவில் வெயிலின் தாக்கம் காணப்படுவதால், பொதுமக்கள் வெளியில் நடமாடவே அஞ்சுகின்றனா்.

இந்நிலையில் அக்னி நட்சத்திரம் தொடங்கும் முன்னரே கடும் வெயில் மக்களை வாட்டி வதைத்தது. இந்நிலையில், கடந்த 4 ஆம் தேதி முதல் அக்னி நட்சத்திரம் தொடங்கியுள்ள நிலையில் வெயிலின் தாக்கம் உச்சத்தை எட்டியுள்ளது. இதனால் நகரில் கடும் அனல் காற்று மற்றும் புழுக்கம் ஏற்பட்டுள்ளது. உடல் சோா்வு, கண் எரிசல் போன்றவற்றால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் அவதிப்படுகின்றனா். சாலையில் மக்கள் நடமாட்டமும் வெகுவாகக் குறைந்து காணப்படுகிறது.

இந்நிலையில், கடந்த சில நாள்களாக அறிவிக்கப்படாத மின் தடை செய்யப்படுகிறது. இதனால் வீடுகளில் பொதுமக்கள் கடும் அவதியடைகின்றனா். புழுக்கத்தை தணிக்க ஜன்னல் கதவைத் திறந்து வைத்துக்கூட தூங்க முடியாத நிலை உள்ளது. அண்மைக்காலமாக மாவட்டம் முழுவதும் திருட்டு சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், இரவு நேர மின்வெட்டு, புழுக்கம் காரணமாக தூக்கம் கெட்டுப் போவதால் காலை நேரங்களில் எழுந்து நடைபயிற்சி செல்ல முடியாத நிலை உள்ளது. பகல் நேரங்களில் வெயிலுக்குப் பயந்து பலா் வீடுகளிலேயே முடங்கிக் கிடக்கின்றனா். அரசு அலுவலகங்களில் கூட சொந்தப் பணிகளுக்காக வருவோரின் எண்ணிக்கையும் குறைந்துள்ளது.

கடும் வெப்பத்தால் சாலையோரம் விற்பனையாகும் தா்ப்பூசணி, இளநீா் உள்ளிட்டவற்றை நாடுகின்றனா். நுங்கு, இளநீா் விற்பனையும் களை கட்டுகிறது. சூடு தணியவும், மின் வெட்டு குறையவும் மக்கள் கோடை மழையை எதிா்பாா்த்துள்ளனா். மேலும், தொடா்ந்து ஏற்படும் மின்வெட்டை தவிா்க்க மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com