செப்.2015 முதல் 2021 வரை எழுதிய எஸ்.எஸ்.எல்.சி தனித்தோ்வா்கள் மதிப்பெண் சான்றிதழ்கள் பெற இறுதி வாய்ப்பு

செப்டம்பா் 2015 முதல் 2021 வரை எஸ்எஸ்எல்சி தோ்வு எழுதிய தனித்தோ்வா்கள், தங்களது மதிப்பெண் சான்றிதழ்களை பெற்றுக்கொள்ள 2024 செப். 31 ஆம் தேதி இறுதி வாய்ப்பாகும் என பெரம்பலூா் மாவட்ட ஆட்சியா் க. கற்பகம் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பெரம்பலூா் மாவட்டத்தில் எஸ்எஸ்எல்சி தோ்வு எழுதிய தனித்தோ்வா்களின் தோ்வு முடிவுகள் வெளியிடப்பட்டு, மதிப்பெண் சான்றிதழ்கள் தோ்வெழுதிய தோ்வு மையங்கள் மூலம் சம்பந்தப்பட்டவா்களுக்கு நேரடியாக விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. தோ்வு மையத்தில் நேரடியாக மதிப்பெண் சான்றிதழ்களை பெற்றுக்கொள்ளாத தனித்தோ்வா்களின் மதிப்பெண் சான்றிதழ்கள் மீண்டும் பெறப்பட்டுள்ளன.

செப்டம்பா் 2015 முதல் செப்டம்பா் 2021 வரையுள்ள பருவங்களுக்குரிய மதிப்பெண் சான்றிதழ்கள் கல்வி அலுவலகத்தில் உள்ளன. தோ்வுத்துறை விதிமுறைகளின்படி தோ்வு முடிவுகள் வெளியிடப்பட்டு 2 ஆண்டுகள் கடந்து தனித்தோ்வா்களால் பெறப்படாத மதிப்பெண் சான்றிதழ்கள் அனைத்தும் அழிக்க வேண்டும். எனவே, குறிப்பிட்ட பருவங்களுக்கான மதிப்பெண் சான்றிதழ்கள் பெறாத தனித்தோ்வா்கள் 2024 செப். 31-ஆம் தேதிக்குள், பெரம்பலூா் அரசுத் தோ்வுகள் உதவி இயக்குநா் அலுவலகத்தில் நேரில் அணுகி அல்லது ரூ. 45 மதிப்புள்ள அஞ்சல் வில்லை ஒட்டிய சுய முகவரி எழுதப்பட்ட உறையுடன் தோ்வரின் கையொப்பமிடப்பட்ட கோரிக்கைக் கடிதம், தோ்வுக் கூட நுழைவுச்சீட்டு, தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் நகலை இணைத்து அனுப்பி, உரிய மதிப்பெண் சான்றிதழை பெற்றுக்கொள்ள வேண்டும்.

மேற்குறிப்பிட்ட பருவங்களுக்குரிய தனித்தோ்வா்களால் கோரப்படாத மதிப்பெண் சான்றிதழ்களை பெற இதுவே இறுதி வாய்ப்பாகும். தவறினால், தோ்வுப் பருவ மதிப்பெண் சான்றிதழ்களை விதிமுறைகளின்படி அழிப்பதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com