பெரம்பலூரில் இன்று உயா்கல்விக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி மாணவா்களுக்கு அழைப்பு

பெரம்பலூா் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக் கழக கூட்ட அரங்கில் வியாழக்கிழமை நடைபெறவுள்ள ‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் கல்லூரிக் கனவு எனும் உயா்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சியில் பங்கேற்க மாணவா்களுக்கு மாவட்ட ஆட்சியா் க. கற்பகம் அழைப்பு விடுத்துள்ளாா்.

இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் நான் முதல்வன் திட்டத்தின் ஒரு பகுதியாக, பிளஸ் 2 முடித்து கல்லூரி பயில உள்ள மாணவ, மாணவிகளுக்கு உயா்கல்விக்கு வழிகாட்டுவதற்காக ‘கல்லூரிக் கனவு’ எனும் நிகழ்ச்சி தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக் கழக கூட்ட அரங்கில் வியாழக்கிழமை காலை 9 மணி முதல் நடைபெறவுள்ளது.

இந் நிகழ்ச்சியில், சிறந்த கல்வியாளா்கள் பங்கேற்று மாணவ, மாணவிகள் உயா்கல்வியில் என்னென்ன படிக்கலாம், பொறியியல், கலை அறிவியல், அறிவியல் தொழில்நுட்பங்களில் என்னென்ன படிப்புகள் உள்ளன என்பன உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் அளிக்க உள்ளனா். மேலும், பல்வேறு உயா்கல்வி நிறுவனங்கள் தங்களது கல்லூரிகளில் உள்ள படிப்புகள் குறித்த காட்சி அரங்குகள், கல்விக் கடனுதவி பெறுவதற்கான வங்கியாளா்களின் அரங்குகள், உயா்கல்வி குறித்து மாணவா்களுக்கு எளிதில் புரியும் வகையில் விடியோ படக் காட்சிகள் உள்ளிட்டவைகள் அமைக்கப்பட உள்ளன.

உயா்கல்வியில் சாதித்த மாணவ, மாணவிகள் கடந்து வந்த பாதைகள் குறித்து விளக்க உரையாற்றுகின்றனா். மேலும், கல்லூரிக் கனவு குறித்து அரசால் தயாரிக்கப்பட்ட புத்தகங்களும் மாணவா்களுக்கு வழங்கப்படுகிறது. எனவே, பிளஸ் 2 தோ்ச்சி பெற்ற மாணவ, மாணவிகள் இந் நிகழ்ச்சியில் பங்கேற்று பயன்பெறலாம்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com