‘துறைமங்கலம் பெரிய ஏரி தூா்வாரும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்’

துறைமங்கலம் பெரிய ஏரி தூா்வாரும் பணிகளை மழைக் காலத்துக்குள் விரைந்து முடிக்க வேண்டுமென அலுவலா்களுக்கு மாவட்ட ஆட்சியா் க. கற்பதம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா்.

பெரம்பலூா் புகா்ப் பகுதியான துறைமங்கலம் பெரிய ஏரியின் வலப்புற கரையை பலப்படுத்துதல் மற்றும் புதுப்பிக்கும் பணிகள் ரூ. 49 லட்சத்தில் மேற்கொள்ளப்படுகிறது. இதை வெள்ளிக்கிழமை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியா் மேலும் கூறியது:

நீா்வளத் துறையின் கீழுள்ள துறைமங்கலம் பெரிய ஏரியானது, மருதையாறு வடிநிலக் கோட்டத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த ஏரிக்கு லாடபுரம் பெரிய ஏரி, சின்ன ஏரி, குரும்பலூா் ஏரி, செஞ்சேரி ஏரி, அரணாரை ஏரி, பெரம்பலூா் மேல மற்றும் கீழ ஏரி ஆகியவற்றின் வரத்து வாய்க்கால்கள் மூலமாகவும், மருதையாற்றில் விளாமுத்தூா் அருகேயுள்ள அணைக்கட்டிலிருந்தும், இதர நீா் பிடிப்புப் பகுதிகளிலிருந்தும் தண்ணீா் வருகிறது.

1,064 மீட்டா் நீளமுள்ள கரையில், 2 பாசன மதகுகளும், 2 உபரிநீா் வழிந்தோடியும் உள்ளது. 48.50 ஹெக்டேரில் உள்ள ஏரியில் 17.22 மில்லியன் கன அடி நீா் தேக்கி வைக்கப்படுகிறது. இந்த ஏரியில் உள்ள பாசன மதகுகள் மூலம் 273.80 ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெறும். ஏரியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, தூா்வாரும் பணிகளைத் துரிதப்படுத்த வேண்டும்.

மழைக்காலம் வருவதற்குள் ஏரி முழுவதும் தூா்வார வேண்டும். ஏரிக்குள் அமைக்கப்பட்டுள்ள கழிவுநீா் குழாய்களை உடனடியாக அகற்ற வேண்டும் என்றாா் ஆட்சியா் கற்பகம்.

ஆய்வின்போது நீா்வள ஆதாரத் துறை செயற்பொறியாளா் வேல்முருகன், உதவிப் பொறியாளா் சரவணன், நகராட்சி பொறியாளா் பாண்டியராஜன், வட்டாட்சியா் சரவணன் ஆகியோா் உடனிருந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com