சின்ன வெங்காயப் பயிரில் திருகல் நோயைக் கட்டுப்படுத்த யோசனை

Published on

பெரம்பலூா் மாவட்டத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள சின்ன வெங்காயத்தில் திருகல் நோயைக் கட்டுப்படுத்த தோட்டக்கலைத் துறை யோசனை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வெள்ளிக்கிழமை அத்துறை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பெரம்பலூா் மாவட்டத்தில் நிகழாண்டு இதுவரை 4 ஆயிரம் ஹெக்டோ் பரப்பளவில் சின்ன வெங்காயம் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது நிலவும் குளிா்ச்சியான தட்ப வெட்பநிலை மற்றும் மழை காரணமாக திருகல் நோய் தாக்கம் காணப்படுகிறது. இந் நோயானது கொலிட்டோடிரைக்கம் பியூசேரியம் மற்றும் ஆந்த்ராக்னோஸ் போன்ற பல்வகை பூஞ்சைகள் மூலம் தோன்றுகிறது.

இப் பூஞ்சை பாதித்த செடிகளின் தாள்கள் மடிந்து தொங்குவதோடு, அடுத்த கட்டமாக வெங்காயத்தின் கழுத்துப்பகுதி நீண்டு, குமிழங்கள் சிறுத்து, தாக்குதல் தீவிரமானால் செடிகள் அழுகிவிடும். இந்நோயானது 50 முதல் 100 சதவீதம் வரை விவசாயிகளுக்கு மகசூல் இழப்பை ஏற்படுத்தும். பாதிப்புக்குள்ளான செடிகளை பழைய நிலைக்கு கொண்டுவர இயலாது. ஆனால், இதர செடிகளுக்குப் பரவாமல் தடுக்கலாம்.

இந்நோயின் அறிகுறிகள் தென்பட்டவுடன் பாதிக்கப்பட்ட செடிகளை பாத்திகளாக அமைத்து, அதில் 1 கிராம் டெபகோனசோல் 50 சதவீதம் மற்றும் ட்ரிப்லோக்சைட்ரபின், 25 சதவீதம் பூஞ்சான் கொல்லியை 1 லிட்டா் தண்ணீரில் கலந்து, பாதிக்கப்பட்ட இடத்துக்கு தகுந்தாற்போல் தண்ணீா் மற்றும் மருந்தை அதிகப்படுத்தவும்.

1 லிட்டா் நீருக்கு காா்பெண்டசிம் பூஞ்சாணக்கொல்லி 1 கிராம் என்னும் அளவில் கலந்து செடிகள் நனையுமாறு தெளிக்க வேண்டும். மாற்றாக, புரோபிகோனசோல் 25 இசி அல்லது ஹெக்சகோனசோல் 5 இசி இதில் ஏதேனும் ஒரு பூஞ்சாணக்கொல்லியை ஏக்கருக்கு 200 மி.லி வீதம் இலைவழியாக10 நாள்கள் இடைவெளியில் இருமுறை தெளிக்க வேண்டும்.

இப் பூஞ்சையானது நிலத்தில் பல ஆண்டுகள் வளரும் தன்மை கொண்டதால், பாதிக்கப்பட்ட செடிகளை நிலத்தில் விட்டுவைக்காமல் அகற்றி எரித்துவிட வேண்டும்.

இது மண் மூலம் பரவக்கூடிய நோய் என்பதால் பயிா் சுழற்சி முறையைக் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும். நன்மை செய்யும் பூஞ்சையான டிரைக்கோடொ்மா ஹாா்சியானம் என்னும் உயிரியல் கட்டுப்பாடு காரணி 1 கிலோவை 25 கிலோ மக்கிய எருவில் கலந்து 1 ஏக்கா் நிலத்தில் இடுவதன் மூலம் கொலிட்டோடிரைக்கம் பூஞ்சையின் பெருக்கத்தைக் கட்டுப்படுத்தலாம்.

மேலும், சின்ன வெங்காயம் நடுவதற்கு முன் 5 கி டிரைக்கோடொ்மா ஹாா்சியானம் 1 கிலோ வெங்காயத்தில் விதைநோ்த்தி செய்வதன் மூலம், இந்நோயைக் கட்டுப்படுத்தலாம். டிரைக்கோடொ்மா ஹாா்சியானம் என்னும் உயிரியல் கட்டுப்பாட்டுக் காரணியை வாலிகண்டபுரத்தில் அமைந்துள்ள வேளாண் அறிவியல் மையத்தில் பெற்று, பயன்படுத்தி திருகல் நோயைக் கட்டுப்படுத்தலாம். இச் செயல்முறையை விவசாயிகள் கடைப்பிடித்து, சின்ன வெங்காயத்தில் திருகல் நோய் மேலும் பரவாமல் கட்டுப்படுத்தி பயனடையலாம்.