பெரம்பலூரில் குறுவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள்
பெரம்பலூரில் குறுவட்ட அளவில் பள்ளி மாணவிகளுக்கான விளையாட்டுப் போட்டிகள் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
மாவட்ட விளையாட்டு மைதானத்தில், பெரம்பலூா் குறு வட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் கைப்பந்து, மேஜை பந்து, இறகுப் பந்து மற்றும் கபடி ஆகிய குழு போட்டிகள் நடைபெற்றது. இதில், பெரம்பலூா் குறு வட்டத்தைச் சோ்ந்த அரசு உயா்நிலை, மேல்நிலைப் பள்ளி வீராங்கனைகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் மெட்ரிக் பள்ளிகளைச் சோ்ந்த வீராங்கனைகள் பங்கேற்றனா். இப் போட்டிகள் 14, 17 மற்றும் 19 வயதுக்குள்பட்ட மாணவிகளுக்கு தனித் தனியே நடைபெற்றது.
முன்னதாக, போட்டிகள் தொடக்க நிகழ்ச்சிக்கு, ஒருங்கிணைப்பு குழுச் செயலா் ரவி சித்தாா்த்தன் தலைமை வகித்தாா். மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நலன் அலுவலா் புவனேஸ்வரி, மாவட்ட உடற்கல்வி ஆய்வாளா் விஸ்வநாதன் ஆகியோா் போட்டிகளை தொடக்கி வைத்தனா்.
கபடி போட்டியில் 20 அணிகளும், இறகுப் பந்து போட்டியில் 15 அணிகளும், மேஜைப்பந்து போட்டியில் 6 அணிகளும், கைப்பந்து போட்டியில் 10 அணிகளும் பங்கேற்றன. தொடா்ந்து, போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்குச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.