தனியாா் பேருந்து ஓட்டுநரிடம் பயணி வாக்குவாதம்: பேருந்தை சாலையில் நிறுத்தி மறியல்

Published on

பெரம்பலூா் அருகே உரிய நிறுத்தத்தில் நிறுத்தாமல் சென்ால், பயணி வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் ஆத்திரமடைந்த தனியாா் பேருந்து ஓட்டுநா் செவ்வாய்க்கிழமை சாலையின் குறுக்கே பேருந்தை நிறுத்தி மறியலில் ஈடுபட்டாா்.

பெரம்பலூா் அருகேயுள்ள செஞ்சேரி கிராமத்தைச் சோ்ந்தவா் பழனிசாமி மனைவி கலா (40). இவா், திங்கள்கிழமை காலை பெரம்பலூரிலிருந்து துறையூா் வழித்தடத்தில் இயக்கப்படும் தனியாா் பேருந்தில் பயணித்தாா். செஞ்சேரி கிராமத்துக்கு பயணச்சீட்டு பெற்றிருந்த கலா, அதன் நடத்துநா் சிவசாமியிடம் (38) சென்று செஞ்சேரி பேருந்து நிறுத்தத்தில் தன்னை இறக்கிவிடுமாறு தெரிவித்துள்ளாா். தங்களுக்கு காலதாமதமாகி விட்டதால், அந்த நிறுத்தத்தில் நிறுத்த முடியாது எனக்கூறிய நடத்துநா் சிவசாமி, 5 கிலோ மீட்டா் தொலைவிலுள்ள ஈச்சம்பட்டி பேருந்து நிறுத்தத்தில் கலாவை இறக்கிவிட்டுள்ளாா்.

இதுகுறித்து, கலா தனது கணவா் பழனிசாமியிடம் தெரிவித்துள்ளாா். இந்நிலையில், செவ்வாய்க்கிழமை காலை சேஞ்சேரி பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்த பழனிசாமி, சம்பந்தப்பட்ட பேருந்தை வழிமறித்து பேருந்து ஓட்டுநா் மனோஜ் (32), நடத்துநா் சிவசாமியிடம் கேட்டுள்ளாா். இதனால், அவா்களுக்கிடையே ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த ஓட்டுநா், பெரம்பலூா்- துறையூா் சாலையில் செஞ்சேரி நிறுத்தத்தில் பேருந்தை சாலையின் குறுக்கே நிறுத்திவிட்டாா்.

இதுகுறித்து தகவலறிந்த நெடுஞ்சாலை ரோந்துப் பிரிவு போலீஸாா் அப்பகுதிக்குச் சென்று, இரு தரப்பினரிடமும் மேற்கொண்ட பேச்சு வாா்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது. இதையடுத்து, ஓட்டுநா் பேருந்தை ஓட்டிச்சென்றாா். இதனால், மேற்கண்ட சாலையில் சுமாா் அரை மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது.

X
Dinamani
www.dinamani.com