டேக்வாண்டோ போட்டியில் வென்றோருக்குப் பாராட்டு
தென்னிந்திய அளவிலான டேக்வாண்டோ போட்டியில் வெண்கலம் வென்ற மாணவிகளை, மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் வெள்ளிக்கிழமை பாராட்டி வாழ்த்தினாா்.
தமிழ்நாடு அரசின் விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாா்பில் தென்னிந்திய அளவிலான அஸ்மித்தா கேலோ இந்தியா மகளிா் டேக்வாண்டோ போட்டிகள் திண்டுக்கல் மாவட்டம், லக்சுா் வேல்டு பள்ளியில் கடந்த 11 முதல் 14 ஆம் தேதி வரை நடைபெற்றன. இப் போட்டிகளில் பெரம்பலூா் மாவட்ட விளையாட்டு விடுதியில் தங்கிப் பயிலும் மாணவிகள் அனிஷா, தாரணி ஸ்ரீ, ரிஷிதா, வா்ஷினி, நவஷினி ஆகியோா் தமிழக அணி சாா்பில் பங்கேற்றனா். இவா்களில் அனிஷா, தாரணிஸ்ரீ ஆகிய மாணவிகள் 3 ஆம் இடம் பெற்று வெண்கலம் வென்றனா்.
இந்நிலையில் இந்த மாணவிகளை மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் வெள்ளிக்கிழமை பாராட்டி வாழ்த்தினாா். நிகழ்ச்சியில், மாவட்ட இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு நல அலுவலா் ச. புவனேஸ்வரி, டேக்வோண்டோ பயிற்றுநா் பரணிதேவி ஆகியோா் பங்கேற்றனா்.