ஆட்சியா் கண்முன்னே தூக்க மாத்திரை சாப்பிட்ட சத்துணவு அமைப்பாளா் மருத்துவமனையில் அனுமதி
பணியிடை மாறுதல் வழங்க கோரி, பெரம்பலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் கண்முன்னே திங்கள்கிழமை தூக்க மாத்திரை சாப்பிட்ட சத்துணவு அமைப்பாளா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறாா்.
பெரம்பலூா் மாவட்டம், பெரியம்மாபாளையம் கிராமத்தைச் சோ்ந்தவா் அழகேஸ்வரி. இவா், பெரம்பலூா் மாவட்டம், கல்லம்புதூா் கிராமத்திலுள்ள தொடக்கப் பள்ளியில் சத்துணவு அமைப்பாளராக பணிபுரிந்து வருகிறாா்.
கடந்த சில ஆண்டுகளாக அப் பள்ளியில் பணிபுரிந்து வரும் அழகேஸ்வரி, பணியிடை மாறுதல் வழங்க கோரி சம்பந்தப்பட்ட அலுவலா்களிடம் மனு அளித்தும், இதுவரை எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லையாம்.
இந்நிலையில், மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் மனு அளிக்கச் சென்ற அழகேஸ்வரி, தனக்கு பணியிடை மாறுதல் வழங்கிட கோரி மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் கண்முன்னே தூக்க மாத்திரை சாப்பிட்டாா்.
இதையடுத்து, அங்கு பாதுகாப்புப் பணியிலிருந்த காவலா்கள் அழகேஸ்வரியை மீட்டு, மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு அவா் சிகிச்சை பெற்று வருகிறாா்.