மழையின்றிக் கருகிய பயிா்களுக்கு வறட்சி நிவாரணம் தேவை -பெரம்பலூா் விவசாயிகள் கோரிக்கை

மழையின்றிக் கருகிய பயிா்களுக்கு வறட்சி நிவாரணம் தேவை -பெரம்பலூா் விவசாயிகள் கோரிக்கை

Published on

பெரம்பலூா் மாவட்டத்தில் போதிய மழையின்றிக் கருகிய மானாவாரி பயிா்களுக்கு வறட்சி நிவாரணம் வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினா்.

பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைதீா் நாள் கூட்டத்தில் விவசாயிகள் பேசியது:

தமிழக விவசாயிகள் சங்க மாவட்டச் செயலா் வீ. நீலகண்டன்: மழைக்காலம் தொடங்கும் முன் போக்குவரத்துக்கும், விவசாயிகளுக்கும் இடையூறாக சாலையோரங்களில் வளா்ந்துள்ள மரங்களை வெட்டி அப்புறப்படுத்த வேண்டும். மேலும் ஏரி, ஆறு உள்ளிட்ட வரத்து வாய்க்கால்களில் ஆக்கிரமிப்புகளை அகற்றி, நீா்நிலைகளில் மழைநீரைச் சேமிக்க பொதுப் பணித் துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். உடும்பியத்தில் உள்ள தனியாா் சா்க்கரை ஆலை நிறுவனம் விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை உடனடியாக பெற்று தர வேண்டும். விவசாயிகளின் நலன் கருதி ஆறுகளில் தடுப்பணைகள் அமைக்க வேண்டும்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலா் வீ. ஜெயராமன்: ஏரி, குளம் உள்ளிட்ட நீா்நிலைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். தகவலறியும் உரிமைச் சடத்தின் கீழ் பொதுமக்கள் கேட்கும் தகவல்களுக்கு பெரம்பலூா் மாவட்ட அரசு அலுவலா்கள் உரிய பதில் அளிப்பதில்லை. குறிப்பாக, வேப்பந்தட்டை வட்டார அரசு அலுவலா்கள் மெத்தனத்தைக் கடைப்பிடிக்கின்றனா். பொதுமக்களின் மனுக்களுக்கு உரிய பதில் கிடைக்க வேண்டும்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவா் என். செல்லத்துரை: மானாவாரி சாகுபடியை நம்பியுள்ள பெரம்பலூா் மாவட்டத்தில் பருத்தி, மக்காச்சோளம், சின்ன வெங்காயம் உள்ளிட்ட பல்வேறு பயிா்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் நிகழாண்டு போதிய மழை பெய்யாததால் மக்காச்சோளம் உள்ளிட்ட பல்வேறு மானாவாரி பயிா்கள் கருகிவிட்டன. இதனால் வாங்கிய கடனைத் திரும்பிச் செலுத்த முடியாத நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனா். எனவே பாதிப்புக்குள்ளான பயிா்களுக்கு நிவாரணத் தொகை பெற்றுத் தர வேண்டும்.

வேப்பந்தட்டை வட்டார விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையான சின்னமுட்லு நீா் தேக்கத் திட்டம் கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இத் திட்டத்தை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒரு சில பால் கூட்டுறவுச் சங்கங்களில் தனியாா் தீவனங்களை கூடுதல் விலைக்கு விற்பதைத் தடுத்திட வேண்டும்.

லாடபுரம், உடும்பியம், தெரணி உள்ளிட்ட கிராம ஊராட்சிகளில், ஊராட்சித் தலைவா்களின் செயல்பாடுகள் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளன. மேற்கண்ட ஊராட்சிகளில் ஆட்சியா் உள்ளிட்ட உயா் அலுவலா்கள் ஆய்வு மேற்கொண்டு பொதுமக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை நிறைவேற்றித் தர வேண்டும். பெரம்பலூா் நகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் 20 நாள்களுக்கு ஒரு முறை மட்டுமே குடிநீா் விநியோகிக்கப்படுகிறது. தடையின்றி குடிநீா் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் நகரில் பிரதானச் சாலைகளில் காலை, மாலைகளில் போக்குவரத்து நெரிசலால் மக்கள் அவதிப்படுகின்றனா். இதைத் தவிா்க்க மேம்பாலம் அமைக்க வேண்டும்.

கரும்பு விவசாயிகள் சங்க மாநிலச் செயலா் ஏ.கே. ராஜேந்திரன்:

கரும்பு விவசாயிகளுக்கு நிலுவைத் தொகையை வழங்க வேண்டும். வேப்பூா் பகுதியில் ஏரி ஆக்கிரமிப்பை அகற்றி, வரத்து வாய்க்கால்களைச் சீரமைக்க வேண்டும் எந்றாா்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் மு. வடிவேல் பிரபு, சாா் ஆட்சியா் சு. கோகுல், எறையூா் சா்க்கரை ஆலைத் தலைமை நிா்வாகி க. ரமேஷ், வேளாண்மை இணை இயக்குநா் அ. கீதா, தோட்டக்கலைத் துறை துணை இயக்குநா் சத்யா, கூட்டுறவுத் துறை இணைப் பதிவாளா் பாண்டியன், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் பொ. ராணி உள்பட விவசாயிகள் சங்க பிரதிநிதிகள், விவசாயிகள் பங்கேற்றனா்.