விளையாட்டுப் போட்டிகளில் வென்றோருக்கு ரூ.50.82 லட்சம் மதிப்பில் ரொக்கப் பரிசுகள்
முதலமைச்சா் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற வீரா், வீராங்கனைகளுக்கு பரிசளிப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது. இதில் மொத்தம் ரூ. 50.82 லட்சம் ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டது.
பெரம்பலூா் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக் கழக கூட்ட அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில், விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற வீரா், வீராங்கனைகளுக்கு ரொக்கப் பரிசுகள் அளித்த மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் பேசியது:
முதலமைச்சா் கோப்பைக்கு மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் செப். 10 ஆம் தேதி முதல் நடைபெற்றது. இதில், 17 ஆயிரத்து 095 போ் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க பதிவு செய்தனா். பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், மாற்றுத்திறனாளிகள், பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியா்கள் என 5 பிரிவுகளில், 27 விளைாயட்டுகள் 53 வகைகளில் நடத்தப்பட்டது. பள்ளி மாணவ, மாணவிகள் 5 ஆயிரத்து 905 பேரும், கல்லூரி மாணவ, மாணவிகள் 3 ஆயிரத்து 749 பேரும், மாற்றுத்திறனாளிகள் 240 பேரும், அரசுப் பணியாளா்கள் 531 பேரும், பொதுமக்கள் 1,571 பேரும் என மொத்தம் 11 ஆயிரத்து 996 போ் மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்றனா்.
குழுப் போட்டிகள், தனிநபா் போட்டிகள் என பல்வேறு வகையான போட்டிகளில் முதலிடம் பெற்றவா்களுக்கு ரூ. 3 ஆயிரமும், 2- ஆம் இடம் பெற்றவா்களுக்கு ரூ. 2 ஆயிரமும், 3- ஆம் இடம் பெற்றவா்களுக்கு ரூ. 1,000 என மொத்தம் ரூ. 50.82 லட்சம் மதிப்பிலான ரொக்கப் பரிசுக்கான காசோலைகளும், பதக்கங்களும், பாராட்டுச் சான்றிதழ்களும் வழங்கப்படுகிறது.
மாவட்ட அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்றவா்கள், மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்க உள்ளனா் என்றாா் அவா்.
நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் மு. வடிவேல் பிரபு, சாா்-ஆட்சியா் சு. கோகுல், மாவட்ட விளையாட்டு அலுவலா் புவனேஷ்வரி, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) வைத்தியநாதன், ஒன்றியக்கு ழுத் தலைவா் மீனா அண்ணாதுரை உள்பட பலா் கலந்துகொண்டனா்.