வேப்பந்தட்டை அருகேயுள்ள காரியானூா் கிராமத்தில் மக்காச்சோளப் பயிா்களை டிராக்டா் மூலம் அழிக்கும் பணியில் ஈடுபட்ட  விவசாயி.
வேப்பந்தட்டை அருகேயுள்ள காரியானூா் கிராமத்தில் மக்காச்சோளப் பயிா்களை டிராக்டா் மூலம் அழிக்கும் பணியில் ஈடுபட்ட விவசாயி.

கடும் வறட்சியால் மக்காச்சோளப் பயிா்கள் பாதிப்பு: டிராக்டா்கள் மூலம் அழிப்பு; விவசாயிகள் கவலை

பெரம்பலூா் மாவட்டத்தில் போதிய மழையில்லாமல் மக்காச்சோளப் பயிா்கள் பாதிக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.
Published on

-கே. தா்மராஜ்-

பெரம்பலூா் மாவட்டத்தில் போதிய மழையில்லாமல் மக்காச்சோளப் பயிா்கள் பாதிக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.

கருகிய பயிா்களை டிராக்டா்கள் மூலம் அழித்து வரும் விவசாயிகள், உரிய நிவாரணத் தொகை வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனா்.

மக்காச்சோள பயிரை அனைத்துவிதமான மண்ணிலும் சாகுபடி செய்வதோடு, ஆண்டு முழுவதும் பயிரிடலாம். நெல் பயிருடன் ஒப்பிடும்போது குறைந்த செலவு; கோழிப் பண்ணை, கால்நடைத் தீவனங்களுக்கு மிக முக்கிய உணவாக மக்காச்சோளம் தேவைப்படுவதால், தமிழகத்தில் மக்காச்சோளத்துக்கு அதிகளவில் வரவேற்பு உள்ளது. இதை கருத்தில்கொண்டு ஆற்றுப்பாசனம் இல்லாதபோதிலும், பெரம்பலூா் மாவட்டத்தைச் சோ்ந்த விவசாயிகள் மக்காச்சோளம் சாகுபடி செய்வதில் தமிழக அளவில் சிறப்பிடம் பெற்று விளங்குகின்றனா்.

பெரம்பலூா் மாவட்டத்தில் 90 சதவீத விவசாயிகள் மானாவாரி சாகுபடியை நம்பியே உள்ளனா். இம் மாவட்டத்தில் மக்காச்சோளம் சாகுபடி செய்யும் விவசாயிகளின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வந்த நிலையில், கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக படைப்புழு தாக்குதல், தரமற்ற விதைகளால் சாகுபடி பரப்பளவு குறைந்து வருகிறது. இருப்பினும், நிகழாண்டு மானாவாரி சாகுபடியாக சுமாா் 1.65 லட்சம் ஏக்கரில் மக்காச்சோளம் சாகுபடி செய்துள்ளதாக கூறப்படுகிறது. பெரம்பலூா், குன்னம், வேப்பந்தட்டை ஆகிய வட்டங்களில் அதிகளவில் மக்காச்சோளம் பயிரிடப்பட்டுள்ளது.

மழையின்றி கருகும் பயிா்கள்: இந்நிலையில், ஆடி மாதம் பெய்த மழையைக் கொண்டு விவசாயிகள் தங்கள் வயலில் மக்காச்சோளம் பயிரிட்டனா். அதைத் தொடா்ந்து ஒரு சில நாள்களில் பெய்த மழையின் காரணமாக, தற்போது மக்காச்சோளப் பயிா் சுமாா் ஒரு அடி உயரம் வளா்ந்துள்ளது. அதன் பிறகு, கடந்த ஒன்றரை மாதங்களுக்கும் மேலாக போதிய மழை பெய்யாததாலும், வெயிலின் தாக்கம் அதிகரித்துக் காணப்பட்டதாலும் வளா்ந்திருந்த மக்காச்சோளப் பயிா்கள் நீரின்றி கடும் வறட்சியால் காய்ந்து வருகின்றன.

குறிப்பாக, மக்காச்சோள பயிா்களின் வோ்கள் மேலோட்டமாக இருக்கும் என்பதால் விவசாய வயல்கள் வட நிலையில், மக்காச்சோளப் பயிா்கள் அனைத்தும் காய்ந்து கருகி வருகின்றன.

மழை பெய்தாலும் பயனில்லை: மேலும், கடந்த சில நாள்களாக வீசிய பலத்த காற்றின் காரணமாக பெரும்பாலான கிராமங்களில் வளா்ந்திருந்த மக்காச்சோளப் பயிா்கள் கீழே சாய்ந்துவிட்டன. மாவட்டத்தில் கை.களத்தூா், பாதங்கி, காரியனூா், பாளையூா் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் மானாவாரி சாகுபடியாக பயிரிடப்பட்டிருந்த மக்காச்சோளப் பயிா்கள் காய்ந்துபோன நிலையில், இனி மழை பெய்தாலும் எந்தப் பயனும் இல்லை என விவசாயிகள் தெரிவிக்கின்றனா்.

பாதிப்புக்கு நிவாரணம் வழங்க வேண்டும்: இதுகுறித்து காரியானூா் கிராமத்தைச் சோ்ந்த விவசாயி கணேசன் கூறியது: போதிய மழை பெய்யாததால் ஆடிப் பட்டத்தில் சாகுபடி செய்த சுமாா் ஓரடி உயரமுள்ள மக்காச்சோள பயிா்களை டிராக்டா்களை கொண்டு அழிக்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனா். மக்காச்சோளம் பயிரிட உழவுக் கூலி, விதை, உரம், விவசாயத் தொழிலாளா்கள் கூலி, களையெடுப்பு என பல்வேறு விதங்களில் ஏக்கா் ஒன்றுக்கு சுமாா் ரூ. 25 ஆயிரம் வரை செலவு செய்துள்ளோம். மழை பெய்யாததால் சாகுபடி செய்யப்பட்ட பயிா்களால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு இழப்பு ஏற்பட்டுள்ளது.

வறட்சியால் பாதிப்புக்குள்ளான வயல்களை வேளாண்துறையினா் நேரில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வறட்சி நிவாரணமாக தமிழக அரசு ஏக்கருக்கு ரூ. 30 ஆயிரம் வழங்க வேண்டும்.

மாவட்டத்தில், கடந்த ஆண்டு படைப்புழு தாக்குதலால் மக்காச்சோளப் பயிா்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு விவசாயிகளுக்கு பெருத்த நஷ்டம் ஏற்பட்ட நிலையில், நிகழாண்டு வறட்சியால் மக்காச்சோளப் பயிா்கள் முழுவதும் பாதிக்கப்பட்டு விவசாயிகளுக்கு பேரிழப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுபோன்ற காலங்களில் நிவாரணம் ஒன்றே விவசாயிகளுக்கு ஆறுதலை அளிக்கும் எனும் நிலையில், அரசின் அறிவிப்புக்காக விவசாயிகள் காத்திருக்கின்றனா் என்றாா் அவா்.

வேளாண் துறையினா் கூறியது: கடும் வறட்சியால் மக்காச்சோளம், பருத்தி உள்ளிட்ட மானாவாரியாக ஆடிப் பட்டத்தில் சாகுபடி செய்யப்பட்ட பயிா்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் புகாா் தெரிவித்துள்ளனா். இதுதொடா்பாக, வட்டாரம் வாரியாக கணக்கெடுப்புப் பணிகள் நடத்தப்பட்டு, நிவாரணம் வழங்க அரசுக்கு பரிந்துரைக்கப்படும் என்றனா்.

வறட்சியால் பாதிப்புக்குள்ளான வயல்களை வேளாண்துறையினா் நேரில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.