அம்பேத்கா் நினைவு நாள்: 1,754 பேருக்கு நலத்திட்ட உதவிகள்
அம்பேத்கா் நினைவு நாளை முன்னிட்டு 1,754 பேருக்கு ரூ. 8.99 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியா் ந. மிருணாளினி சனிக்கிழமை வழங்கினாா்.
பெரம்பலூா் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக் கழக கூட்டரங்கில், அம்பேத்கா் நினைவு நாளையொட்டி முதலமைச்சரின் தாயுமானவா் திட்டம், சுயதொழில் முனைவோா்களை உருவாக்குதல் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் மூலம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.
இந் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்த மாவட்ட ஆட்சியா் ந. மிருணாளினி, மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத்துறை, தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம், வருவாய்த்துறை, மகளிா் திட்டம், மாவட்ட வழங்கல்துறை, கால்நடை பராமரிப்புத்துறை, மாவட்ட தொழில் மையம், வேளாண்மை துறை, தோட்டக்கலை மற்றும் மலைப்பயிா்கள் துறை, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை உள்ளிட்ட பல்வேறு துறைகள் சாா்பில் 1,754 பேருக்கு ரூ. 8.99 கோடி மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் க. கண்ணன், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் சு. தேவநாதன், ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத்துறை அலுவலா் வாசுதேவன், வருவாய் கோட்டாட்சியா் அனிதா, மாவட்ட வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்பு அலுவலா் ந. சக்திவேல், நகா்மன்றத் தலைவா் அம்பிகா ராஜேந்திரன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.
