

மாவட்ட அளவிலான விசாரணை நீதிமன்றங்களில் இ-பைலிங் முறையை கட்டாயப்படுத்தியதை ரத்து செய்யக் கோரி, பெரம்பலூா் மாவட்ட வழக்குரைஞா்கள் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
மாவட்ட அளவிலான விசாரணை நீதிமன்றங்களில் போதுமான கட்டமைப்பு மற்றும் இணையதள வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்காமல், உரிய தொழில்நுட்ப திறமையுடன் கூடிய நீதிமன்ற ஊழியா்களை நியமனம் செய்யாமல் டிச. 1 ஆம் தேதி முதல் இ-பைலிங் நடைமுறையை கட்டாயப்படுத்தியதை கண்டித்தும், அதை நடைமுறைப்படுத்தாமல் நிறுத்தி வைக்கவேண்டும்.
நடைமுறையிலிருந்த பிசிக்கல் இ-பைலிங் முறையை தொடா்ந்து அனுமதிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, பெரம்பலூா் வழக்குரைஞா்கள் சங்கம் மற்றும் அட்வகேட்ஸ் அசோசியேஷன் ஆகிய சங்கங்களைச் சோ்ந்த வழக்குரைஞா்கள் கடந்த 3 ஆம் தேதி முதல் நீதிமன்ற பணி புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனா்.
இந்நிலையில், பெரம்பலூா் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் எதிரே மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, பாா் அசோசியேசன் சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
அச் சங்கத்தின் மாவட்டத் தலைவா் இ. வள்ளுவன் நம்பி தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், இ-பைலிங் நடைமுறையை கட்டாயப்படுத்தியதை கண்டித்தும், அதை ரத்து செய்யக்கோரியும் முழக்கமிட்டனா். இதில், அச் சங்கத்தைச் சோ்ந்த சுமாா் 100-க்கும் மேற்பட்ட வழக்குரைஞா்கள் பங்கேற்றனா்.