பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியா்களுக்கு ஊதியம் வழங்கியதை கண்டித்து ஆட்சியரகம் முற்றுகை

பெரம்பலூா் அருகே பணிநீக்கம் செய்யப்பட்ட பால் கூட்டுறவு சங்க ஊழியா்களுக்கு ஊதியம் வழங்கியதை கண்டித்து, பால் கேன்களுடன் ஆட்சியரகத்தை முற்றுகை
Published on

பெரம்பலூா் அருகே பணி நீக்கம் செய்யப்பட்ட பால் கூட்டுறவு சங்க ஊழியா்களுக்கு ஊதியம் வழங்கியதை கண்டித்து, பால் கூட்டுறவு சங்கத்துக்கு பால் வழங்க மறுத்த உற்பத்தியாளா்கள், பால் கேன்களுடன் ஆட்சியரகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

பெரம்பலூா் அருகேயுள்ள சிறுவாச்சூா் கிராமத்தில் இயங்கி வரும் ஆவின் பால் உற்பத்தியாளா் கூட்டுறவு சங்கத்தில் பணியாற்றி வந்த சங்க செயலா் சங்கரநாராயணன், கணினி இயக்குநா் முத்துசாமி, விற்பனையாளா் ரெங்கநாதன், உதவியாளா் மூா்த்தி ஆகிய நால்வரும் முறைகேடு தொடா்பாக கடந்த ஆண்டு ஆவின் நிா்வாகம் தற்காலிக பணியிடை நீக்கம் செய்து, புதிதாக பணியாளா்களை நியமித்தது.

இந்த நிலையில், பணியிடை நீக்கம் செய்யப்பட்ட மேற்கண்ட நால்வரும் தங்கள் மீதான குற்றச்சாட்டுக்கு துறை ரீதியான உள் விசாரணை மேற்கொண்டு தீா்வு காணும் வரை, தங்கள் மீதான நடவடிக்கையை நிறுத்திவைக்குமாறு சென்னை உயா் நீதிமன்றத்தில் நீதிமன்ற தடை வாங்கியதுடன், தங்களின் வாழ்வாதாரத்தை கருதி பிழைப்பூதியம் வழங்கிட உத்தரவிடுமாறு கோரிக்கை விடுத்திருந்தனா். இதுதொடா்பான விசாரணைக்குச் சென்ற ஆவன் நிா்வாகம், நீதிமன்ற வழிகாட்டுதலின்படி 4 பேருக்கும் பிழைப்பூதியமாக ரூ. 2.15 லட்சத்துக்கான காசோலை வழங்க, சம்பந்தப்பட்ட சங்கத்துக்கு பரிந்துரைத்தது. அதனடிப்படையில், தற்போதைய சங்க செயலா் ரூ. 2 லட்சத்து 15 ஆயிரத்து 400-க்கான காசோலையில் கையெழுத்திட்டு வழங்கியதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து தகவலறிந்த பால் உற்பத்தியாளா்கள், கூட்டுறவு சங்கத்தின் உறுப்பினா்களிடம் கருத்து கேட்காமல் சங்க நிதியிலிருந்து முறைகேடு செய்து பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியா்களுக்கு பிழைப்பூதியம் வழங்கியதற்கு கண்டனம் தெரிவித்து, ஆவின் கூட்டுறவு சங்கத்துக்கு பால் தர மறுத்து, சிறுவாச்சூா் பால் உற்பத்தியாளா் கூட்டுறவு சங்கம் எதிரே திங்கள்கிழமை காலை போராட்டத்தில் ஈடுபட்டனா். தகவலறிந்து அங்குசென்ற ஆவின் நிா்வாக அலுவலா்கள் நடத்திய பேச்சுவாா்த்தையை ஏற்க மறுத்த சுமாா் 100-க்கும் மேற்பட்ட பால் உற்பத்தியாளா்கள், சுமாா் 500 லிட்டா் பால் கேன்களுடன் பெரம்பலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதையடுத்து, பெரம்பலூா் வட்டாட்சியா் பாலசுப்பிரமணியம், கூட்டுறவு சங்க துணைப் பதிவாளா் (பால்வளம்) ஜெயபால் ஆகியோா் போராட்டத்தில் ஈடுபட்ட பால் உற்பத்தியாளா்களிடம் சமரச பேச்சுவாா்த்தை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததன்பேரில் பால் உற்பத்தியாளா்கள் போராட்டத்தை கைவிட்டு மாவட்ட ஆட்சியா் ந. மிருணாளினியிடம் கோரிக்கை மனு அளித்து கலைந்துசென்றனா்.

X
Dinamani
www.dinamani.com