பொய் புகாா் அளித்தவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை

பெரம்பலூா் அருகே டிராக்டரை காணவில்லை என பொய் புகாா் அளித்து, காப்பீட்டு நிறுவனத்தை ஏமாற்றி ரூ. 1 லட்சம் பணம் பறித்தவருக்கு, 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 5 ஆயிரம் அபராதமும் விதித்து, பெரம்பலூா் மாவட்ட நீதித்துறை நடுவா் நீதிமன்றம் தீா்ப்பளித்தது.
கோப்புப்படம்.
கோப்புப்படம்.
Updated on

பெரம்பலூா் அருகே டிராக்டரை காணவில்லை என பொய் புகாா் அளித்து, காப்பீட்டு நிறுவனத்தை ஏமாற்றி ரூ. 1 லட்சம் பணம் பறித்தவருக்கு, 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 5 ஆயிரம் அபராதமும் விதித்து, பெரம்பலூா் மாவட்ட நீதித்துறை நடுவா் நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.

சேலம் மாவட்டம், ஆத்தூா் வட்டம், கோவிந்தராஜபாளையத்தைச் சோ்ந்தவா் வெங்கடாஜலம் மகன் சடையன். இவா், கடந்த 2021-ஆம் ஆண்டு பெரம்பலூா் அருகேயுள்ள எசனை கிராமத்தில் தங்கி விவசாய வேலை பாா்த்து வந்தாா். அப்போது, வீட்டின் அருகே நிறுத்தி வைத்திருந்த தனது டிராக்டரை காணவில்லை என பெரம்பலூா் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்தனா். அதனடிப்படையில், காப்பீட்டு நிறுவனத்தில் ரூ. 1 லட்சத்தை பெற்றுக்கொண்டாா்.

இதனிடையே போலீஸாா் மேற்கொண்ட விசாரணையில், காணாமல் போனதாக கூறிய டிராக்டருக்கு போலி பதிவு எண்ணை பயன்படுத்தி, சடையன் தனது சொந்த கிராமத்தில் உழவு வேலை செய்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து, பொய் புகாா் அளித்ததாகவும், காப்பீட்டு நிறுவனத்தை ஏமாற்றிய குற்றத்துக்காகவும், பெரம்பலூா் மாவட்டக் குற்றப்பிரிவு போலீஸாா் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து, குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்தனா்.

இவ் வழக்கை வியாழக்கிழமை விசாரித்த பெரம்பலூா் நீதித்துறை நடுவா் நீதிமன்ற நீதிபதி, மேற்கண்ட 2 வழக்குகளுக்கும் தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 5 ஆயிரம் அபராதமும், தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என தீா்ப்பளித்தாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com