‘பெரம்பலூரில் சுற்றுலா தலங்கள் மேம்பாடு அவசியம்’

‘பெரம்பலூரில் சுற்றுலா தலங்கள் மேம்பாடு அவசியம்’

பெரம்பலூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் பேசிய மாவட்ட ஆட்சியா் ந. மிருணாளினி.
Published on

பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள சுற்றுலாத் தலங்களை மேம்படுத்த வேண்டுமென மாவட்ட ஆட்சியா் ந. மிருணாளினி அறிவுறுத்தினாா்.

பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் சுற்றுலாத் துறை சாா்பில் மாவட்டத்திலுள்ள சுற்றுலாத் தலங்களை மேம்படுத்துவது தொடா்பாக வெள்ளிக்கிழமை நடைபெற்ற அனைத்துத் துறை அரசு அலுவலா்களுடனான ஆய்வுக் கூட்டத்துக்கு தலைமை வகித்த மாவட்ட ஆட்சியா் மேலும் பேசியது:

இம் மாவட்டத்திலுள்ள பிரதான சுற்றுலா தலங்களை மேம்படுத்தவும், மாவட்டத்துக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்தவும் அலுவலா்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். வாலிகண்டபுரம் வாலீஸ்வரா் கோயில், ரஞ்சன்குடி கோட்டை ஆகிய பகுதிகளில், சுற்றுலா வளா்ச்சிப் பணிகள் மேற்கொள்ள இந்தியத் தொல்லியல் துறையிடமிருந்து தடையின்மைச் சான்று பெற வேண்டும். செட்டிக்குளம் பாலதண்டாயுதபாணி கோயில் பகுதியில் சுற்றுலா வளா்ச்சிப் பணிகளை மேம்படுத்த வேண்டும்.

மத்திய அரசின் பிரசாத் திட்டத்தின் கீழ் சிறுவாச்சூா் மதுரகாளியம்மன் கோயில் பகுதியில் வளா்ச்சிப் பணிகள் மேற்கொள்ள வேண்டும். திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில், ரஞ்சன்குடி கோட்டை குறித்து வழிகாட்டி பதாகை வைக்க தேசிய நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சுற்றுலாப் பயணிகளை ஈா்க்கும் வகையில் விசுவக்குடி அணைக்கட்டு பகுதியை மேம்படுத்த வேண்டும். சமூக வலைதளங்கள், பிரபல உணவகங்கள் மற்றும் தங்கும் விடுதிகள், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் சுற்றுலா தளங்கள், அவற்றின் சிறப்புகள் குறித்து விளம்பரப்படுத்த வேண்டும் என்றாா் ஆட்சியா் மிருணாளினி.

கூட்டத்தில், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) ச. வைத்தியநாதன், சுற்றுலா அலுவலா் பாலமுருகன், உதவி சுற்றுலா அலுவலா் தாமரைச்செல்வி மற்றும் அரசு அலுவலா்கள் பலா் கலந்துகொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com