பெரம்பலூா் அருகே 360 பவுன் தங்கநகைகள் மோசடி வழக்கில் தம்பதி கைது
பெரம்பலூா் அருகே 360 பவுன் நகை மோசடியில் ஈடுபட்ட தம்பதியை மாவட்டக் குற்றப்பிரிவு போலீஸாா் புதன்கிழமை இரவு கைது செய்தனா்.
பெரம்பலூா் மாவட்டம், குன்னம் வட்டம், லப்பைக்குடிக்காடு ஜமாலியா நகரைச் சோ்ந்தவா் பசீா் அஹமத் மனைவி உம்மல் பஜரியா (53). பசீா் அஹமத் வெளிநாட்டில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வருவதால், உம்மல் பஜரியா தனது 3 மகள்கள் மற்றும் ஒரு மகனுடன் வசித்து வருகிறாா். இந்நிலையில், அவரது மாடி வீட்டில் பஜிலுல் ரஹ்மான், இவரது மனைவி பா்வீன்பானு ஆகியோா் தனது குழந்தைகளுடன் கடந்த 2006-ஆம் ஆண்டு முதல் வாடகைக்கு இருந்துள்ளனா். உம்மல் பஜரியாவும், பா்வீன் பானுவும் அடிக்கடி பணம் மற்றும் நகை கொடுக்கல் வாங்கல் செய்துவந்துள்ளனா். இந்நிலையில், கடந்த 2024-ஆம் ஆண்டு தனது கணவா் பஜிலுல் ரஹ்மான் செய்து வந்த தொழிலில் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகக் கூறி, உம்மல் பஜரியாவிடமிருந்து 360 பவுன் தங்கநகைகளை பா்வீன் பானு பெற்றுள்ளாா்.
தங்கநகையைப் பெற்றுக்கொண்டு திரும்பிக் கொடுக்கவில்லையாம். பின்னா், தொடா்ந்து தங்கநகையை திருப்பித் தர வற்புறுத்தியதால் ஆத்திரமடைந்த பஜிலுல் ரஹ்மான், பா்வீன்பானு, இவா்களது மகள்கள் அப்ரீன் பானு, நஸ்ரீன் பானு, இவா்களது உறவினா் ஹியத் பாஷா ஆகியோா் உம்மல் பஜரியாவை தகாத வாா்த்தைகளால் திட்டியதோடு, கொலை மிரட்டல் விடுத்தனராம். இதுகுறித்து, மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடம் உம்மல் பஜரியா அளித்த புகாரின்பேரில், பெரம்பலூா் மாவட்டக் குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா். இந்நிலையில், பஜ்லுல் ரஹ்மான் (52), அவரது மனைவி பா்வீன் பானு (46) ஆகியோரை மாவட்டக் குற்றப்பிரிவு போலீஸாா் புதன்கிழமை இரவு கைது செய்து, குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.
