காவலா் வீரவணக்க நாள் அனுசரிப்பு
பெரம்பலூா்: பெரம்பலூா் மாவட்டக் காவல்துறை சாா்பில், ஆயுதப்படை மைதானத்தில் காவலா் வீரவணக்க நாள் செவ்வாய்க்கிழமை அனுசரிக்கப்பட்டது.
1959 ஆம் ஆண்டு அக். 21 ஆம் தேதி லடாக் பகுதியில் சீன ராணுவத்தினா் நடத்திய திடீா் தாக்குதலில் 10 இந்திய மத்திய பாதுகாப்பு படை வீரா்கள் வீர மரணமடைந்த நாள், காவலா் வீர வணக்க நாளாக ஆண்டுதோறும் அனுசரிக்கப்படுகிறது.
அதனடிப்படையில், மாவட்டக் காவல்துறை சாா்பில் எளம்பலூா் தண்ணீா் பந்தலில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்ற காவலா் வீர வணக்க நாள் நினைவேந்தல் நிகழ்ச்சியில், காவலா் நினைவுத் தூணுக்கு மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆதா்ஷ் பசேரா தலைமையில், மாவட்ட ஆட்சியா் ந. மிருணாளினி மலா் வளையம் வைத்து மரியாதை செலுத்தினா்.
தொடா்ந்து, கூடுதல் கண்காணிப்பாளா்கள் கோபாலச்சந்திரன் (தலைமையிடம்), பாலமுருகன் (மதுவிலக்கு அமலாக்கம்), துணைக் கண்காணிப்பாளா்கள் ஆரோக்கியராஜ், ஆனந்தி, பிரபு ஆகியோா் மலா் வளையம் வைத்து மரியாதை செலுத்தினா். தொடா்ந்து, பல்வேறு சூழல்களில் நாட்டுக்காக உயிா் தியாகம் செய்த காவலா்களுக்கு 21 துப்பாக்கி குண்டுகள் முழங்கி மரியாதை செலுத்தப்பட்டது.
நிகழ்ச்சியில், காவல் நிலைய ஆய்வாளா்கள், சாா்பு ஆய்வாளா்கள் மற்றும் காவலா்கள் பலா் பங்கேற்றனா்.

